பணம் பறிக்க முயன்ற 3 பேர் கைது
பணம் பறிக்க முயன்ற 3 பேர் கைது
கோவை
கோவையில் வீடியோவில் கள்ளநோட்டுகளை காட்டி பணம் பறிக்க முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கள்ளநோட்டு கும்பல்
கோவை அரசு ஆஸ்பத்திரி எதிர்புறம் பஸ்நிறுத்தம் உள்ளது. இந்த பஸ்நிறுத்தத்தில் உக்கடம் அருகே உள்ள ஜே.கே. கார்டன் பகுதியைச் சேர்ந்த முகமது ஹனீபா (வயது 41) என்பவர் பஸ்சுக்காக காத்து நின்றார்.
அப்போது அங்கு நின்ற 3 பேர் அவரிடம் நைசாக பேச்சு கொடுத்தனர். எங்களிடம் கள்ளநோட்டுகள் உள்ளன, நீங்கள் ஒரு லட்சம் ரூபாய் நல்ல ரூபாய் நோட்டு கொடுத்தால், அதற்கு 3 மடங்கு கள்ளநோட்டு தருகிறோம். அதனை வைத்து நீங்கள் செலவு செய்யலாம் என ஆசைவார்த்தை கூறினர். தங்களிடம் கள்ளநோட்டு இருப்பதற்கு ஆதாரமாக செல்போன் வீடியோ ஒன்றையும் காண்பித்தனர்.
அதற்கு முகமது ஹனீபா, நீங்கள் இங்கேயே காத்து இருங்கள், நான் பணம் எடுத்து வருகிறேன் என்று கூறி விட்டு அங்கிருந்து சென்றார். நேராக அவர் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்துக்கு சென்று நடந்த விவரங்களை தெரிவித்தார். உதவி கமிஷனர் கணேசன் உத்தரவின்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் போலீசார் அரசு ஆஸ்பத்திரி பஸ் நிறுத்தம் பகுதிக்கு விரைந்து சென்றனர்.
3 பேர் கைது
முகமது ஹனீபா, பணம் கொண்டு வருவார் என்ற எதிர்பார்ப்பில் 3 பேர் கும்பல் காத்து நின்றது. போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பி ஓட முயன்றனர். அவர்களை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் கோவை வீரபாண்டி பிரிவைச் சேர்ந்த பிரகாஷ் (வயது 47), குன்னூர் நஞ்சப்பசத்திரத்தைச் சேர்ந்த கலைவாசன் (50), மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்த சண்முக பிரசாத் (36) என்பது தெரியவந்தது.
மேலும் அவர்கள் வந்த காரும் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் அவர்களிடம் கள்ளநோட்டு எதுவும் இல்லை என்பதும், வீடியோவில் கள்ளநோட்டுகளை காண்பித்து பணம் பறிக்க முயன்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.