ரேஷன் அரிசி கடத்த முயன்ற 3 பேர் கைது
பொள்ளாச்சியில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்த முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் கார், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்த முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் கார், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
வாகன சோதனை
பொள்ளாச்சி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் நிலையத்திற்கு தாவளம் வழியாக ரேஷன் அரிசி கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கலைசெல்வன் மற்றும் போலீசார் தாவளம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தாவளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகில் வந்த காரை போலீசார் மறித்தனர். போலீசார் நிற்பதை பார்த்ததும் டிரைவர் காரை நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டார்.
இதற்கிடையில் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் சின்னராஜ் (வயது 37), கேரளாவை சேர்ந்த காதர் பாட்சா (43) என்பது தெரியவந்தது. மேலும் ஏற்கனவே பிடிபட்ட காரில் ரேஷன் அரிசி கடத்தி வரப்பட்டு இருப்பதும், அந்த காருக்கு பைலட்டாக மோட்டார் சைக்கிளில் இவர்கள் வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
3 பேர் கைது
அதாவது மண்ணூர், மாப்பிள்ளைகவுண்டன்புதூர் பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, கேரளாவில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்கு கடத்தி சென்றதும், இதற்கு உடந்தையாக சாதிக் (40) என்பவர் இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து சாதிக்கை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். தப்பி ஓடிய டிரைவர் காளீஸ்வரன் என்பவரை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தி கார், மோட்டார் சைக்கிள் மற்றும் 21 மூட்டைகளில் இருந்த 1,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.