ஊத்துக்கோட்டையில் வாலிபர் கொலை வழக்கில் 3 பேர் கைது


ஊத்துக்கோட்டையில் வாலிபர் கொலை வழக்கில் 3 பேர் கைது
x

ஊத்துக்கோட்டையில் நடந்த வாலிபர் கொலை வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பேரூராட்சிக்குட்பட்ட அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ஜார்ஜ். இவர் பொன்னேரியில் உள்ள லேத் பட்டறையில் வேலை செய்து வருகிறார். இவரது மகன் ராபின் (வயது 24). இவர் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள புதுவாயலில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

ராபினின் நண்பரின் திருமண விருந்து நிகழ்ச்சி ஊத்துக்கோட்டை அருகே உள்ள போந்தவாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் கடந்த 31-ந்தேதி இரவு நடைபெற்றது. ராபின் தன்னுடைய நண்பர் கமலுடன் விருந்தில் கலந்து கொண்டு சாப்பிட்ட பின்னர் இரவு 11 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டனர்.

ஊத்துக்கோட்டை பழைய பெட்ரோல் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தபோது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த அடையாளம் தெரியாத 4 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக்கொல்லப்பட்டார்.

இது குறித்து ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரகாசன், இன்ஸ்பெக்டர் ஏழுமலை ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

கொலையாளிகளை பிடிக்க துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சந்திரகாசன், குமரவேல், இன்ஸ்பெக்டர்கள் ஏழுமலை, தணிகைவேல் ஆகியோரின் தலைமையில் 5 தனிபடை போலீஸ் அமைக்கப்பட்டது. செங்குன்றம் அருகே உள்ள சோழவரத்தை சேர்ந்த கார்த்திக் (23), மதுரை சரவணன் (26) ராகுல் (26) ஆகியோர் இந்த கொலையில் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்தது. இவர்கள் 3 பேரும் ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாராட்சி பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. போலீசார் அவர்களை சுற்றி வளைத்து நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.

போலீஸ் விசாரணையில் சேதுபதி மற்றும் முத்தரரசன் ஆகியோர் ரவுடிகள் என்பதும், கடந்த மாதம் சேதுபதி கும்பலை சேர்ந்த கானாஆதி என்பவர் கொலை செய்யப்பட்டார். முத்தரசன் ஆட்கள் இவரை கொலை செய்ததாக கூறப்படுகிறது.

இந்த கொலையில் முத்தரசன் கும்பலை சேர்ந்த காரனோடை பகுதியை சேர்ந்த மோகன் (30) என்பவர் முக்கிய பங்கு வகித்ததாக கூறப்படுகிறது. இவர் அடிக்கடி ஊத்துக்கோட்டை வரும்போது ஊத்துக்கோட்டை அம்பேத்கர் நகரை சேர்ந்த ராபினை சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது. இது சேதுபதி கும்பலுக்கு எரிச்சலூட்டியது. நேரம் வரும்போது மோகன் மற்றும் ராபினை தீர்த்துக்கட்ட சேதுபதி கும்பல் முடிவு செய்தது. கடந்த 31-ந்தேதி இரவு ஊத்துக்கோட்டை அருகே உள்ள போந்தவாக்கம் திருமண மண்டபத்தில் நடந்த திருமண விருந்து நிகழ்ச்சியில் மோகன் மற்றும் ராபின் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் சேதுபதி கும்பலும் கலந்து கொண்டது. விருந்து நிகழ்ச்சி நடந்த பின்னர் ராபின் தன்னுடைய நண்பர் கமலுடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டபோது ஊத்துக்கோட்டை பழைய பெட்ரோல் நிலையம் எதிரே ராபினை அரிவாளால் வெட்டி சாய்த்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.

இந்த விஷயம் தெரிந்த மோகன் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார் என்பது விசாரணையில் தெரியவந்தது. மோகன் பிடிபட்டிருந்தால் அவரையும் தீர்த்து கட்டி இருப்போம் என்று கைது செய்யப்பட்ட கார்த்திக், மதுரை சரவணன், ராகுல் ஆகியோர் போலீசாரிடம் தெரிவித்ததாக தெரிகிறது.

போலீசார் இவர்கள் 3 பேரையும் ஊத்துக்கோட்டை உரிமையியல் மற்றும் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.


Next Story