சிவகங்கையை சேர்ந்தவர் கொலையில் 3 பேர் கைது - பணமோசடி ெசய்ததால் பயங்கரம்பணமோசடிசெய்ததால் பயங்கரம்
சிவகங்கையை சேர்ந்தவர் கொலையில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். பணமோசடியில் தந்தை இறந்ததால் மகன் நண்பர்களுடன் தீர்த்துக்கட்டியது அம்பலமாகி உள்ளது.
மேலூர்,
சிவகங்கையை சேர்ந்தவர் கொலையில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். பணமோசடியில் தந்தை இறந்ததால் மகன் நண்பர்களுடன் தீர்த்துக்கட்டியது அம்பலமாகி உள்ளது.
சிவகங்கையை சேர்ந்தவர் கொலை
சிவகங்கை மாவட்டம் கட்டானிபட்டி அருகிலுள்ள பொன்குண்டுபட்டியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 55). இவர் கடந்த 17-ந் தேதி மோட்டார் சைக்கிளில் மதுரை மாவட்டம் மேலூர் நோக்கி வந்தார். மேலூர் அருகே ஆட்டுக்குலம் விலக்கு என்னுமிடத்தில் வந்தபோது அவரை பின் தொடர்ந்து காரில் வந்த மர்ம கும்பல் ஒன்று மோட்டார் சைக்கிளை வழிமறித்து கண்ணனை ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு காரில் தப்பி ஓடிவிட்டது.
சம்பவ இடத்துக்கு வந்த மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரகாஷ் கொலையாளிகளை பிடிக்க மாவட்டம் முழுவதிலும் போலீசாரை உஷார்படுத்தினார். மேலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆர்லியஸ்ரெபோனி, இன்ஸ்பெக்டர் மன்னவன் ஆகியோர் அருகிலுள்ள ரகசிய கேமராக்கள் மற்றும் கார் சென்ற வழிகளில் உள்ள ரகசிய கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து கொலையாளிகளை பிடிக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.
3 பேர் சிக்கினர்
இந்நிலையில் பேரையூரில் போலீஸ் துணை சூப்பிரண்டு இலக்கியா தலைமையிலான போலீசார் ரோந்து சென்றபோது சந்தேகப்படும்படியாக நின்ற 5 பேரை விசாரித்துள்ளனர். அப்போது 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். பிடிபட்ட 3 பேரும் சென்னை எண்ணூரை சேர்ந்தவர்கள் ஜெகதீஷ் (27), மில்டன் (26), வினோத்குமார் (29). தப்பி ஓடியவர்கள் விழுப்புரம் மாவட்டம் விக்ரவாண்டியை சேர்ந்த முகிலன் (20) மற்றும் புதுச்சேரி பி.எஸ்.பாளையத்தை சேர்ந்த வசந்தகுமார் (20) எனவும் இவர்கள் மேலூர் அருகே நடந்த கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்று தெரியவந்தது.
அதனையடுத்து ஜெகதீஷ், மில்டன், வினோத்குமார் ஆகிய 3 பேரை மேலூர் போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய புதுச்சேரியை சேர்ந்த முகிலன், வசந்தகுமார் ஆகியோர் பேரையூர் கோர்ட்டில் ஆஜராகினர். மேலூர் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட கண்ணன் பல்வேறு பண மோசடி சம்பவங்களில் தொடர்புடையவர் என்றும் அவ்வாறு சென்னை எண்ணூரை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவரிடம் பண மோசடி செய்ததாகவும், பணத்தை இழந்ததால் மனமுடைந்து பன்னீர்செல்வம் இறந்துபோனதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பன்னீர்செல்வத்தின் மகன் ஜெகதீஷ் நண்பர்களுடன் சேர்ந்து மேலூர் அருகே கண்ணனை கொலை செய்ததாக முதற்கட்ட தகவல் கூறப்படுகிறது. மேலூர் போலீசார் கைதுசெய்த 3 பேரையும் மேலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு அந்த 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.