மோட்டார் சைக்கிள் திருடிய 3 பேர் சிக்கினர்; போலீசாருடன் உறவினர்கள் வாக்குவாதம்-மறியல்
மோட்டார் சைக்கிள் திருடிய 3 பேர் சிக்கிய நிலையில், அவர்களது உறவினர்கள் போலீசாருடன் வாக்குவாதம் செய்து மறியலில் ஈடுபட்டனர்.
பொன்மலைப்பட்டி:
மோட்டார் சைக்கிள் திருட்டு
திருச்சி அரியமங்கலம் அம்மாக்குளம் கலைவாணர் தெருவை சேர்ந்தவர் பிச்சைமுத்து. இவரது மனைவி விசாலாட்சி (வயது 43). இவர் தனது மகன் பரத்குமார் (20) என்பவருக்கு கடந்த 1-ந் தேதி சுமார் ரூ.2 லட்சத்தில் புதிய மோட்டார் சைக்கிளை வாங்கி கொடுத்துள்ளார். அந்த மோட்டார் சைக்கிளை சம்பவத்தன்று இரவில் வீட்டில் நிறுத்திய பரத்குமார், மறுநாள் எழுந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் காணவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர், புகைப்படத்துடன் அந்த மோட்டார் சைக்கிள் பற்றி தகவல் தெரிந்தால், தனக்கு தெரிவிக்குமாறு, சமூக வலைத்தளங்களில் செல்போன் எண்ணை பதிவிட்டு இருந்தார். மேலும் இது குறித்து விசாலாட்சி நேற்று முன்தினம் அரியமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் அரியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து, அதில் பதிவான காட்சிகளை பார்வையிட்டனர்.
மறியல்
அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும்படியாக சுற்றிய அரியமங்கலம் அம்மாகுளம் பகுதியை சேர்ந்த ரியாஸ்ராஜ் (22) என்ற வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் திருச்சி கருமண்டபத்தை சேர்ந்த மேகராஜ் (31), அரியமங்கலம் நேருஜி நகரை சேர்ந்த ஹரி பிரசாத் ஆகியோர்தான் பரத்குமார் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளின் லாக்கை உடைத்து மோட்டார் சைக்கிளை எடுத்து வந்ததாகவும், அதை ஸ்டார்ட் செய்ய முடியாமல், அங்கு கொண்டு வந்து மறைத்து வைத்துள்ளதாகவும் கூறியுள்ளார். அதன் அடிப்படையில் அரியமங்கலம் போலீசார் அந்த மோட்டார் சைக்கிளை மீட்டதோடு, இந்த வழக்கில் தொடர்புடைய 3 பேரையும் கைது செய்தனர்.
இந்த நிலையில் மேகராஜின் மனைவி எலிசபெத் (28), தனது கணவர் மீது அரியமங்கலம் போலீசார் பொய் குற்றம் சுமத்துவதாக கூறி, அவரது உறவினரான பெரிய மிளகு பாறையை சேர்ந்த லாரன்ஸ் (19), மைக்கேல் (23), அந்தோணி மகன் ஆதாம் (23), திருச்சி பாலக்கரை கூனி பஜாரை சேர்ந்த ஏகாம்பரம் மகன் அறிவழகன் (24) ஆகிய 5 பேரும், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு, தற்கொலை செய்து கொள்ளப் போவதாக செல்போன் டெம்பர் கிளாசால் கைகளில் கிழித்துக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கைது
மேலும் மேகராஜ் உள்ளிட்ட 3 பேரையும் கோர்ட்டிற்கு போலீசார் அழைத்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து எலிசபெத் உள்ளிட்ட 5 பேரையும் அரியமங்கலம் போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கஞ்சா விற்றவர் கைது
*கோட்டை போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட நரசுபிள்ளை தெருவில் நிறுத்தப்பட்டிருந்த பாலாஜி (31) என்பவரின் மோட்டார் சைக்கிளை சம்பவத்தன்று மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
*திருச்சி ஸ்ரீரங்கம் கொள்ளிடக்கரை பகுதியை சேர்ந்த நாகரத்தினம் என்பவரின் மோட்டார் சைக்கிளை திருடிச்சென்ற வழக்கில் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த முருகானந்தம் (43), பரத்ஸ்ரீ (19), பிரபு (42) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
*திருச்சி டி.வி.எஸ்.டோல்கேட் பகுதியில் கஞ்சா விற்றதாக கீழகல்கண்டார் கோட்டை பகுதியை சேர்ந்த ராகுல் (19) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1¼ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.