லாரி-கார் நேருக்குநேர் மோதல்; தந்தை, மகள் உள்பட 3 பேர் பலி


லாரி-கார் நேருக்குநேர் மோதல்; தந்தை, மகள் உள்பட 3 பேர் பலி
x
தினத்தந்தி 27 May 2023 6:45 PM GMT (Updated: 27 May 2023 6:46 PM GMT)

லாரி-கார் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் தந்தை-மகள் உள்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

சிவகங்கை

காரைக்குடி

லாரி-கார் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் தந்தை-மகள் உள்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

கார்-லாரி மோதல்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே வாகைக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 39). இவர் கரூரில் ஓட்டல் நடத்தி வந்தார்.

மனைவி, மகள் அபிநயாவுடன் (6) கரூரில் வசித்து வந்தார். இந்தநிலையில் கணேசன் தனது ஓட்டல் வேலைக்கு சொந்த கிராமத்தில் இருந்து ஆட்களை அழைத்து செல்வதற்காக கரூரில் இருந்து நேற்று தனது காரில் வந்தார். தன்னுடன் மகள் அபிநயா (6), அக்காள் மகள் சரிதா (16) ஆகியோரையும் அழைத்து வந்தார்..

இவர்கள் 3 பேரும் பயணித்த கார் நேற்று மதியம் 3 மணி அளவில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை நோக்கி வந்தது.

திருச்சி-ராமேசுவரம் பைபாஸ் சாலையில் காரைக்குடியை அடுத்த சங்கரபதிகோட்டை பகுதியில் வந்தபோது, காரைக்குடியை நோக்கி ஒரு லாரி வந்தது. அப்போது காரும், லாரியும் நேருக்குநேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. இதில் காரின் முன்பகுதி நொறுங்கியது.

3 பேர் பலி

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே கணேசன், அவருடைய மகள் அபிநயா மற்றும் சரிதா ஆகியோர் உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் காரின் இடிபாடுகளில் சிக்கி இருந்தன.

மேலும் லாரி டிரைவரான காரைக்குடி அருகே கொத்தமங்கலத்தைச் சேர்ந்த காளிமுத்துவுக்கு (40) காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடல்கள் மீட்பு

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காரைக்குடி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் தலைமையில் போலீசார் அங்கு சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

காரில் சிக்கிய 3 பேரின் உடல்களையும் மீட்டு காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

காயம் அடைந்த லாரி டிரைவர் காளிமுத்து சிகிச்சைக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இந்த கோர விபத்து குறித்து அமராவதிபுதூர் சோமநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். லாரி-கார் ேமாதிக்கொண்ட விபத்தில் காரில் வந்த 2 சிறுமிகள் உள்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story