வெவ்வேறு விபத்துகளில் 3 பேர் பலி


வெவ்வேறு விபத்துகளில் 3 பேர் பலி
x

வெவ்வேறு விபத்துகளில் 3 பேர் பலியானார்கள்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியம் பிளேஸ்பாளையம் காலனியை சேர்ந்தவர் சுமன் (வயது 22). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் கடந்த 4-ந்தேதி இருளிப்பட்டு கிராமத்திற்கு வேலைக்கு சென்றார். கன்னிகைப்பேர் தனியார் பெட்ரோல் நிலையம் அருகே சென்றபோது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட சுமன் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பயனின்றி நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து சுமணின் சகோதரர் சின்னத்தம்பி பெரியபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

எல்லாபுரம் ஒன்றியம் ஆவாஜிப்பேட்டை கிராமம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் முனுசாமி (42). இவர் கடந்த சனிக்கிழமை இரவு வேலைக்கு சென்று விட்டு தனது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். ஆவாஜிப்பேட்டை எம்.ஜி.ஆர்.நகர் சாலை வளைவில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிளில் இருந்து முனுசாமி நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பயனின்றி நேற்று முன்தினம் இரவு அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து முனுசாமியின் மனைவி ராணி நேற்று பெரியபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கும்மிடிப்பூண்டி அடுத்த மெதிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் நடேசன். இவரது மனைவி சாவித்திரி (வயது 60). இவர் நேற்று முன்தினம் எளாவூர் பஜாரில் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது சென்னையில் இருந்து ஆந்திரா நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் சாவித்திரி மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைத்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சாவித்திரியின் உடல் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்து ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story