வெவ்வேறு விபத்துகளில் 3 பேர் பலி


வெவ்வேறு விபத்துகளில் 3 பேர் பலி
x
தினத்தந்தி 12 April 2023 12:15 AM IST (Updated: 12 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நாகை மாவட்டம் திருமருகல் அருகே வெவ்வேறு விபத்துகளில் 3 பேர் பலியானார்கள். மேலும் கணவன்-மனைவி படுகாயம் அடைந்தனர்.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

நாகை மாவட்டம் திருமருகல் அருகே வெவ்வேறு விபத்துகளில் 3 பேர் பலியானார்கள். மேலும் கணவன்-மனைவி படுகாயம் அடைந்தனர்.

லாரி மோதியது

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கொத்தமங்கலம் ஊராட்சி அனந்தநல்லூர் மேலத்தெருவை சேர்ந்தவர் இளையராஜா (வயது42) கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி உஷா (25). இருவரும் உறவினரின் திருமண நிகழ்ச்சிக்காக திட்டச்சேரியில் இருந்து வவ்வாலடிக்கு சென்று கொண்டிருந்தனர்.

வாளாமங்கலம் அருகே சென்ற போது எதிரே காரைக்கால் காந்திநகர் பகுதியை சேர்ந்த வடிவேலு மகன் ரவி என்பவர் ஓட்டி வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. பின்னர் லாரியை டிரைவர் திரும்ப முயன்ற போது இடபுறத்தில் சைக்கிளில் சென்ற போலகம் ஊராட்சி கீழக்குருவாடி பகுதியை சேர்ந்த அன்பழகன் (62) என்பவர் மீது லாரி மோதியது.

முதியவர் பலி

இந்த விபத்தில் அன்பழகன், இளையராஜா, உஷா ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு 108 ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர்.

அங்கு அன்பழகனை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இளையராஜா மற்றும் உஷா ஆகிய இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து தகவல் அறிந்த திட்டச்சேரி போலீசார் அன்பழகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

இதேபோல் திருமருகல் ஒன்றியம் எரவாஞ்சேரி ஊராட்சி தேவன்குடி நடுத்தெருவை சேர்ந்தவர் ராமசாமி மகன் செந்தில்குமார் (36) கூலித்தொழிலாளி. இவர் சம்பவத்தன்று காரைக்காலுக்கு வேலைக்குச் சென்று விட்டு வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். இந்திராநகர் அருகே வந்த போது கட்டுமாவடி ஊராட்சி துண்டம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் பிரபு (29) என்பவர் ஓட்டி வந்த லோடு ஆட்டோ, மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த செந்தில்குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செந்தில்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து தகவல் அறிந்த திட்டச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சைக்கிள் மீது மோட்டார் சைக்கிள் மோதல்

திருமருகல் ஒன்றியம் சேஷமூலை செட்டித்தெருவை சேர்ந்தவர் லெட்சுமணராமன் (55). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர் சம்பவத்தன்று பணிகளை முடித்துவிட்டு சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சீயாத்தமங்கை அருகே வந்த போது பின்னால் சீயாத்தமங்கை மெயின் ரோடு பகுதியை சேர்ந்த வரதராஜ் மகன் தன்ராஜ்(40) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள், சைக்கிள் மீது மோதியது.

இந்த விபத்தில் லெட்சுமணராமன், தன்ராஜ் ஆகிய 2 பேரும் காயம் அடைந்தனர். உடனடியாக அக்கம், பக்கத்தினர் லெட்சுமணராமனை மீட்டு சிகிச்சைக்காக திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும், தன்ராஜை 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து தன்ராஜை மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தன்ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து திட்டச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்


Next Story