வெவ்வேறு விபத்துகளில் 3 பேர் பலி
வெவ்வேறு விபத்துகளில் 3 பேர் பலியானார்கள்.
வெவ்வேறு விபத்துகளில் 3 பேர் பலியானார்கள்.
கணவன்-மனைவி இடையே தகராறு
திருவெறும்பூர் அருகே உள்ள வாழவந்தான் கோட்டை ஊராட்சி முடுக்கு பட்டியை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 30). கூலி தொழிலாளி. இவரது மனைவி ராஜேஸ்வரி. இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ராஜேஸ்வரி கணவரிடம் கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
இந்த நிலையில் வேல்முருகன் மனைவியை அழைத்து வருவதற்காக மோட்டார் சைக்கிளில் வாழவந்தான் கோட்டை ரெட் நகர் பகுதியில் நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தார்.
சாவு
அப்போது தஞ்சை மாவட்டம் வெண்டயம் பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கனிமொழியின் கணவர் சிவக்குமார் (50) என்பவர் ஓட்டி வந்த கார் வேல்முருகன் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதனிடையே சிவக்குமார் காைர நிறுத்தாமல் சென்று விட்டார். அப்பகுதி மக்கள் விரட்டி சென்று காரை பிடித்தனர். இது குறித்த புகாரின் பேரில் துவாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கார் மோதி பெண் பலி
தேனி மாவட்டம் சந்தப்பேட்டை காமயாசாமி பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவர் தனது குடும்பத்துடன் உறவினர் திருமணத்திற்கு கார் மூலம் சென்னை புறப்பட்டு சென்றார். அந்த காரை முருகேசன் என்பவர் ஓட்டி வந்தார். அதில் சரவணனின் மனைவி கவிதா (40). அவர்களது 2 குழந்தைகள், மற்றும் உறவினர் ஜோதிமணி உள்ளிட்ட 6 பேர் பயணித்தனர். இதையடுத்து அந்த கார் நேற்று காலை 10.40 மணியளவில் திருச்சி ராம்ஜிநகர் அருகே வந்த போது சாலையில் வெள்ளை கோடு போடும் பணி நடைபெற்று வந்தது. இதையடுத்து அந்த வழியாக சென்ற அனைத்து வாகனங்களும் திருச்சி - திண்டுக்கல் சாலையில் திருப்பி விடப்பட்டது. முருகேசன் ஓட்டி வந்த காரும் திருப்பி விடப்பட்டது.
அப்போது திருச்சியில் இருந்து திண்டுக்கல் செல்லும் அரசு பஸ் அவர்கள் வந்த கார் மீது மோதியது. இதில் காரின் முன்பக்கம் பலத்த சேதம் அடைந்தது. இதில் காரில் வந்த கவிதாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மற்றவர்கள் லேசான காயம் அடைந்தனர். உடனே அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கவிதா பரிதாபமாக இறந்தார். இது குறித்து தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தா.பேட்டை
தா.பேட்டையை அடுத்த ஜெம்புநாதபுரம் கிராமத்தில் முசிறி - துறையூர் செல்லும் சாலையில் உள்ள தனியார் கியாஸ் குடோன் அருகில் சாலையில் நடந்து சென்ற சுமார் 45 வயது மதிக்கத்தக்க நபர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து துலையாநத்தம் கிராம நிர்வாக அதிகாரி சஞ்சீவி அளித்த புகாரின் பேரில் ஜெம்புநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.