வெவ்வேறு விபத்துக்களில் 3 பேர் பலி


வெவ்வேறு விபத்துக்களில் 3 பேர் பலி
x
தினத்தந்தி 25 Sep 2023 7:30 PM GMT (Updated: 25 Sep 2023 7:30 PM GMT)

மாவட்டத்தில் வெவ்வேறு விபத்துக்களில் 3 பேர் பலியானார்கள்.

கிருஷ்ணகிரி

மாவட்டத்தில் வெவ்வேறு விபத்துக்களில் 3 பேர் பலியானார்கள்.

முதியவர்

மத்தூர் அருகே அத்திகனூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீசன் (வயது 72). இவர், தன்னுடைய மோட்டார் சைக்கிளில் சொந்த வேலையாக கிருஷ்ணகிரிக்கு சென்று விட்டு மீண்டும் அத்திகனூருக்கு வந்து கொண்டிருந்தார். பெரிய பனமுட்லு என்ற இடத்தில் வந்த போது பாண்டிச்சேரியில் இருந்து பெங்களூருக்கு வந்த கார் மீது மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியது.

இதில் பலத்த காயமடைந்த ஜெகதீசனை அங்கிருந்தவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் ஜெகதீசன் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விபத்து குறித்து கந்திகுப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

வாலிபர்

குருபரப்பள்ளி அருகே பெரிய புலியரசியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது26), கூலி தொழிலாளி. இவர், அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் (17) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் பந்தாரப்பள்ளி அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது முன்னால் சென்ற கன்டெய்னர் லாரி திடீரென்று பிரேக் பிடித்து நின்றது.

பின்னால் சென்ற மோட்டார் சைக்கிள் லாரி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த விஜயகுமார் சம்பவ இடத்திலேயே இறந்தார். சக்திவேல் படுகாயத்துடன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து குருபரப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொழிலாளி பலி

கந்திகுப்பம் அருகே பசவண்ண கோவில் பகுதியைச் சேர்ந்தவர் திருப்பதி (வயது 32). கட்டிட தொழிலாளி. இவர், மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணகிரி குப்பம் சாலையில் உள்ள காளி கோவில் கிராமத்துக்கு சென்றுள்ளார். குருவிநாயனப்பள்ளி பழைய செக்போஸ்ட் அருகில் சென்றபோது குப்பத்தில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி வந்த லாரியும், மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன. இதில் திருப்பதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த கந்திகுப்பம் போலீசார் திருப்பதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரிக்கு அனுப்பிவைத்தனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


Next Story