சொத்துக்காக விவசாயியை கொலை செய்த 2-வது மனைவி, மகன் உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை-அரியலூர் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு


சொத்துக்காக விவசாயியை கொலை செய்த 2-வது மனைவி, மகன் உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை-அரியலூர் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
x

சொத்துக்காக விவசாயியை கொலை செய்த 2-வது மனைவி, மகன் உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து அரியலூர் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்தது.

அரியலூர்

விவசாயி

அரியலூர் மாவட்டம் விளாங்குடியை அடுத்த சுந்தரேசபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 90), விவசாயி. இவருடைய முதல் மனைவி 30 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதையடுத்து, அவரது சகோதரியான பஞ்சவர்ணத்தை (77) 2-வதாக திருமணம் செய்து கொண்டார். முதல் மனைவிக்கு தர்மராஜ் (58) என்ற மகனும், தனலட்சுமி (60) என்ற மகளும் உள்ளனர். பஞ்சவர்ணத்துக்கு தங்கமணி (50) என்ற மகன் உள்ளார்.

சாமிநாதன் தன்னிடம் இருந்த சொத்துக்களை தனது பிள்ளைகள் அனைவருக்கும் சமமாக பிரித்து கொடுத்துவிட்டு, தனது கடைசி காலத்துக்காக ஒரு ஏக்கர் நிலத்தை தன் பெயரில் வைத்துக்கொண்டு தனது மனைவி பஞ்சவர்ணத்துடன் வசித்து வந்துள்ளார்.

அரிவாளால் வெட்டிக்கொலை

இந்தநிலையில், தனது பெயரில் இருந்த ஒரு ஏக்கர் நிலத்தையும் 2-வது மனைவியின் மகன் தங்கமணியின் மகனான அரவிந்தின் பெயரில் எழுதி பாதுகாவலராக மருமகள் சாந்தியை (45) நியமித்துள்ளார். இதனால், அந்த நிலத்தை தங்கமணி உழவு செய்துள்ளார். இதையறிந்த தர்மராஜ் கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் 19-ந் தேதி தந்தை மற்றும் தங்கமணியிடம் இதுகுறித்து கேட்டபோது, நாளை பேசிக்கொள்ளலாம் என சாமிநாதன் கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த தங்கமணி, அந்த நிலத்தை பிரித்து முதல் மனைவியின் மகனுக்கும் அளித்து விடுவாரோ என்ற அச்சத்தில் சாமிநாதனின் கழுத்து மற்றும் தலையில் அரிவாளால் வெட்டினார். இதில் சம்பவ இடத்திலேயே சாமிநாதன் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். இந்த கொலைக்கு தங்கமணியின் தாயார் மற்றும் மனைவி உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.

ஆயுள் தண்டனை

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த விக்கிரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி கொலை செய்த தங்கமணி, அவருடைய மனைவி சாந்தி, தாயார் பஞ்சவர்ணம் ஆகியோரை கைது செய்தனர்.

இந்த கொலை வழக்கின் விசாரணை அரியலூர் முதன்மை மாவட்ட அமர்வு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்தநிலையில், இறுதி விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.

இதையடுத்து மேற்கண்ட 3 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி மகாலட்சுமி பரபரப்பு தீர்ப்பளித்தார். அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

சிறையில் அடைப்பு

இதையடுத்து 3 பேரையும் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்ற போலீசார் தங்கமணியை திருச்சி மத்திய சிறையிலும், பஞ்சவர்ணம், சாந்தி ஆகியோரை திருச்சி மகளிர் சிறையிலும் அடைத்தனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சின்னத்தம்பி ஆஜராகினார்.


Next Story