கோழிகளை திருடி இறைச்சி கடையில் விற்ற சிறுவன் உள்பட 3 பேர் கைது


கோழிகளை திருடி இறைச்சி கடையில் விற்ற சிறுவன் உள்பட 3 பேர் கைது
x

கோழிகளை திருடி இறைச்சி கடையில் விற்ற சிறுவன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி

சமயபுரம்:

சமயபுரம் அருகே உள்ள வி.துறையூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜீவானந்தம்(வயது 63). இவர் மண்ணச்சநல்லூர் அருகே சக்தி நகரில் உள்ள தனது மகன் வீட்டில் இருந்து வருகிறார். மேலும் வீட்டில் 30 கோழிகளை வளர்த்து வந்தார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு 30 கோழிகளும் திருட்டு போனது. இது குறித்து மண்ணச்சநல்லூர் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

இந்நிலையில் மண்ணச்சநல்லூர், திருப்பைஞ்சீலி சமயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோழி இறைச்சி கடைகளில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சமயபுரம் கடைவீதியில் உள்ள ஒரு கோழி இறைச்சி கடையில், 3 பேர் கோழிகளை கொண்டு வந்து விற்பனை செய்ததாகவும், பாதி பணம் கொடுத்துள்ளதாகவும், மீதி பணத்தை வாங்க வருவார்கள் என்றும் கடைக்காரர் கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து அப்பகுதியில் கண்காணித்த போலீசார், மீதி பணம் வாங்க வந்தவர்களை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள தெற்கு ஈச்சம்பட்டி பள்ளிவாசல் தெருவை சேர்ந்த அப்துல் ரசாக்கின் மகன்கள் அப்துல் ரஷீத்(22), அப்துல் ரகுமான்(19) மற்றும் நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியை சேர்ந்த 18 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.


Next Story