சாலை விபத்தில் போலீஸ்காரர் உள்பட 3 பேர் படுகாயம்
சாலை விபத்தில் போலீஸ்காரர் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
புன்னம்சத்திரம் அருகே சாலிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 41). இவர் கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் அவரது மனைவி நித்தியானந்தி (39), மகன் வைஷ்ணவ் (12) ஆகியோரை அழைத்து கொண்டு மோட்டார் சைக்கிளில் நேற்று முன்தினம் இரவு புன்னம் சத்திரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே காருடையாம்பாளையம் காலனியை சேர்ந்த கிஷோர்குமார் என்பவர் ஓட்டி மோட்டார் சைக்கிள், பொன்னுசாமியின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட பொன்னுசாமி, நித்தியானந்தி, வைஷ்ணவ் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். கிஷோர்குமாருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து அனைவரும் கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்த புகாரின்பேரில், கிஷோர் குமார் மீது வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.