கார் கவிழ்ந்து டேபிள் டென்னிஸ் பயிற்சியாளர் உள்பட 3 பேர் படுகாயம்
கார் கவிழ்ந்து டேபிள் டென்னிஸ் பயிற்சியாளர் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
திருவெறும்பூர்,ஜூலை.27-
திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் கலைவாணர் தெருவை சேர்ந்தவர் சவரிமுத்து. இவரது மகன் அகஸ்டின் (வயது 29). டேபிள் டென்னிஸ் பயிற்சியாளரான இவர், நேற்று முன்தினம் போலீஸ் காலனியில் உள்ள நண்பர் வீட்டிற்கு காரில் சென்றார். அவருடன் காட்டூர் கைலாஷ் நகரை சேர்ந்த ஐ.டி.நிறுவன ஊழியர் விவேக் (29), விவேக்கின் அண்ணன் பிரவீன் (33) ஆகியோர் சென்றனர். பின்னர் அவர்கள், அங்கிருந்து மீண்டும் திரும்பி துவாக்குடி அருகே உள்ள ரிங் ரோட்டில் வந்து கொண்டிருந்தனர். அப்போது, எதிரே வந்த லாரி மோதியதில் கட்டு்ப்பாட்டை இழந்த கார் தலைகீழாக கவிழ்ந்தது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 3 பேரையும் அப்பகுதியினர் மீட்டு திருச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் துவாக்குடி போலீசார் விபத்தை ஏற்படுத்திய திண்டுக்கல் எல்லப் பட்டியை சேர்ந்த லாரி டிரைவர் காளிமுத்து மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.