கரடி கடித்துக் குதறியதில் வியாபாரி உள்பட 3 பேர் படுகாயம்; பொதுமக்கள் போராட்டத்தால் பரபரப்பு
கடையம் அருகே கரடி கடித்துக் குதறியதில் வியாபாரி உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடையம்:
கடையம் அருகே கரடி கடித்துக் குதறியதில் வியாபாரி உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வியாபாரி
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள கருத்தலிங்கபுரத்தை சேர்ந்தவர் வைகுண்டமணி (வயது 58). மசாலா பொடி வியாபாரம் செய்து வருகிறார்.
இவர் வழக்கம் போல் நேற்று காலையில் கடையம் அருகே உள்ள சிவசைலத்தில் இருந்து பெத்தான்பிள்ளை குடியிருப்பு பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் வியாபாரத்திற்கு புறப்பட்டார்.
கரடி கடித்துக் குதறியது
அப்போது, வனப்பகுதியில் இருந்து கரடி ஒன்று திடீரென்று சாலையின் குறுக்கே வந்தது. இதை பார்த்து வைகுண்டமணி அதிர்ச்சி அடைந்தார். அவர் சுதாரிப்பதற்குள் கரடி, வைகுண்டமணியை கீழே தள்ளி தாக்கி கடித்துக் குதறியது.
அந்த சமயத்தில் அந்த வழியாக வந்த கருத்தப்பிள்ளையூர் பகுதியைச் சேர்ந்த சம்சா வியாபாரி ஒருவர் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவர் இதுகுறித்து உடனடியாக ஊரில் உள்ளவர்களுக்கு தகவல் தெரிவித்தார். ஊர் பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, வைகுண்டமணியை காப்பாற்ற முயன்றனர்.
அப்போது, பெத்தான்பிள்ளை குடியிருப்பு பகுதியைச் நாகேந்திரன் (54), அவரது தம்பி சைலப்பன் (52) ஆகியோரையும் கரடி கடித்துக் குதறிவிட்டு வனப்பகுதிக்குள் தப்பிச் சென்றுவிட்டது. இதில் 3 பேரும் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தனர்.
ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
இதுகுறித்து தகவல் அறிந்த கடையம் வனச்சரகர் கருணாமூர்த்தி மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் முற்றுகை
இதற்கிடையே கரடி தாக்கியதில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள், பொதுமக்கள் சிவசைலத்தில் உள்ள வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அங்கு சாலை மறியிலில் ஈடுபட்டனர்.
அப்போது, அவர்கள் கூறுகையில் '3 பேரை கடித்துக்குதறிய கரடியை சுட்டுப்பிடிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்' என்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்னரசு, கடையம் இன்ஸ்பெக்டர் சரவணன், ஆழ்வார்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதில் உடன்பாடு ஏற்படவில்லை.
4 மணி நேரம் போராட்டம்
தொடர்ந்து தென்காசி தாசில்தாா் ஆதி நாராயணன், வருவாய் ஆய்வாளர் திலகராஜ், கிராம நிர்வாக அலுவலர் செல்வ கணேஷ், சிவசைலம் பஞ்சாயத்து தலைவி மலர்மதி சங்கர பாண்டியன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 2 நாட்களுக்குள் கரடி பிடிக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். காலை 9 மணி அளவில் தொடங்கிய இந்த போராட்டம் மதியம் 1 மணிவரை சுமார் 4 மணி நேரம் நடைபெற்றது.
கடையம் அருகே 3 பேரை கரடி கடித்துக் குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மயக்க ஊசி செலுத்தி கரடி பிடிக்கப்பட்டது
இதையடுத்து வனத்துறையினர் காட்டுப்பகுதியில் கரடியை தேடிச் சென்றனர். இந்த நிலையில் நேற்று மாலையில் ஊருக்கு அருகே உள்ள காட்டுப்பகுதியில் அங்கும் இங்கும் சுற்றித்திரிந்த கரடியை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர்.