வெவ்வேறு விபத்துகளில் பெண் உள்பட 3 பேர் பலி


வெவ்வேறு விபத்துகளில் பெண் உள்பட 3 பேர் பலி
x

சுதா

நெல்லை மாவட்டத்தில் நடந்த வெவ்வேறு விபத்துகளில் பெண் உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.

திருநெல்வேலி

விக்கிரமசிங்கபுரம்:

தென்காசி மாவட்டம் ஆம்பூர் கீழ தெருவைச் சேர்ந்தவர் நடராஜன். இவருடைய மகன் இசக்கிமுத்து (வயது 19). கூலி தொழிலாளி. அதே பகுதியைச் சேர்ந்தவர் முத்து மகன் லட்சுமணன். நண்பர்களான இவர்கள் 2 பேரும் நேற்று மதியம் ஒரு மோட்டார் சைக்கிளில் பாபநாசத்துக்கு சென்று கொண்டிருந்தனர். இசக்கிமுத்து மோட்டார் சைக்கிளை ஓட்டினார். பாபநாசம் பொதிகையடி பகுதியில் சென்றபோது, சாலையார மரத்தில் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயமடைந்த இசக்கிமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். லட்சுமணன் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். விபத்து குறித்து தகவல் அறிந்ததும், விக்கிரமசிங்கபுரம் போலீசார் விரைந்து சென்று, இசக்கிமுத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பழவூர் அருகே உள்ள கூட்டப்புளியை சேர்ந்தவர் எட்வர்டு (வயது 77). இவர் கூட்டப்புளி தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிப்புரிந்து ஓய்வுபெற்றவர். இவர் நேற்று மாலை கணபதியாபுரம் விலக்கில் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக கன்னியாகுமரி நோக்கி சென்ற கார் எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பழவூர் போலீசார் விரைந்து வந்து, அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பழவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திசையன்விளை அருகே உள்ள கரைசுத்துபுதூரை சேர்ந்தவர் சித்திரை பாண்டி. இவருடைய மனைவி சுதா (வயது 49). இவர் விஜய அச்சம்பாட்டில் உள்ள தனது பெற்றோரை பார்த்து விட்டு மகன் அஸ்வினுடன் நேற்று மோட்டார் சைக்கிளில் கரைசுத்துபுதூருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். திசையன்விளையை அடுத்த தலைவன்விளையில் உள்ள வேகத்தடையில் வந்தபோது, மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்த சுதா கீழே தவறி விழுந்தார். இதில் அவர் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜமால் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story