விவசாயி கொலை வழக்கில் தந்தை-மகன் உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை


விவசாயி கொலை வழக்கில் தந்தை-மகன் உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை
x

முசிறி அருகே விவசாயி கொலை வழக்கில் தந்தை-மகன் உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி கோர்ட்டில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

திருச்சி

முசிறி அருகே விவசாயி கொலை வழக்கில் தந்தை-மகன் உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி கோர்ட்டில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

சொத்து தகராறு

திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா தும்பாலம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 48). இவருடைய மனைவி கோவிந்தம்மாள் (45). இவர்களுக்கு பிரபாகரன், சுதாகர் ஆகிய 2 மகன்களும், நதியா என்ற மகளும் உள்ளனர். முருகேசன்-கோவிந்தம்மாள் தம்பதி குடும்பத்துடன் விவசாயம் செய்து வந்தனர்.

முருகேசனின் அண்ணன் அண்ணாவி (62), தம்பி பெரியசாமி (48). இவர்களுக்கு, அவரது தந்தை கருப்பண்ணன் தனது சொத்தை பிரித்து கொடுத்துள்ளார். இந்த நிலையில் சொத்து தொடர்பாக அண்ணன்-தம்பிகள் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

வெட்டிக்கொலை

இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் 7-ந்தேதி அன்று மதியம் முருகேசன், தனது மனைவி கோவிந்தம்மாள், மகன் சுதாகர், மகள் நதியா ஆகியோருடன் தங்களது விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது, அண்ணாவி, பெரியசாமி, அண்ணாவியின் மகன் சத்யராஜ் (29) ஆகிய 3 பேரும் அங்கு வந்து முருகேசனுடன் தகராறு செய்தனர். இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் முருகேசன், கோவிந்தம்மாள், சுதாகர் ஆகியோரை உருட்டுக்கட்டையால் தாக்கியதுடன் அரிவாளால் வெட்டினர்.

இதில் படுகாயம் அடைந்த 3 பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக முசிறி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் முருகேசன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற இருவரும் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினர். இது குறித்து கோவிந்தம்மாள் கொடுத்த புகாரின்பேரில் முசிறி போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து சத்யராஜ், அண்ணாவி, பெரியசாமி ஆகிய 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

3 பேருக்கு ஆயுள் தண்டனை

இதுதொடர்பான வழக்கு விசாரணை திருச்சி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயக்குமார் முன்னிலையில் நடந்து வந்தது. இந்த வழக்கில் சாட்சி விசாரணை முடிவடைந்தை தொடர்ந்து நேற்று நீதிபதி தீர்ப்பு கூறினார். இதில் முருகேசனை கொலை செய்த குற்றத்துக்காக சத்யராஜ், அண்ணாவி, பெரியசாமி ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், மேலும் கோவிந்தம்மாளை தாக்கிய குற்றத்துக்காக சத்யராஜுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை, அண்ணாவிக்கு ஓராண்டு சிறை தண்டனையும் மேலும் இருவருக்கும் தலா ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். மேலும் இந்த தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் தனது தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் மாவட்ட கூடுதல் அரசு வக்கீல் பாலசுப்பிரணியன் ஆஜர் ஆனார்.


Next Story