மதுரை அருகே பெண்ணை கொன்று கிணற்றில் வீசிய காதல் கணவர் உள்பட 3 பேர் கைது
மதுரை அருகே பெண்ணை கொன்று கிணற்றில் வீசிய காதல் கணவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை அருகே பெண்ணை கொன்று கிணற்றில் வீசிய காதல் கணவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
அடித்துக்கொலை
மதுரை வரிச்சியூர் அருகே குன்னத்தூர் பகுதியில் உள்ள கிணற்றில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 2 சடலங்கள், எலும்பு கூடுகளாக மீட்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில், அதில் ஒருவர் 6 மாதத்திற்கு காணாமல் போன, குன்னத்தூர் பகுதியை சேர்ந்த பூவலிங்கம் என்பது தெரியவந்தது. மற்றொரு பெண் உடல் யாருடையது என்பது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் உத்தரவின் பேரில் கருப்பாயூரணி போலீசார் விசாரித்து வந்தனர்.
மேலும், அந்த பகுதியில் காணாமல் போனவர்கள் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டது. அதன்பேரில், கிணற்றுக்குள் இருந்து மீட்கப்பட்ட பெண் எலும்பு கூடு பற்றி அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது. அவர், குன்னத்தூரை சேர்ந்த அலெக்ஸ் பாண்டி (வயது 26) மனைவி ஐஸ்வர்யா (21) என தெரியவந்தது. சந்தேகத்தின் பேரில் போலீசார் அலெக்ஸ் பாண்டியிடம் விசாரித்தனர். அப்போது, அவர் மனைவியை கொலை செய்து பிணத்தை கிணற்றில் வீசியதை ஒப்புக்கொண்டார். அவர் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:-
மெக்கானிக் வேலை செய்து வந்த அலெக்ஸ்பாண்டிக்கு ஏற்கனவே திருமணம் நடந்துள்ளது. இதற்கிடையே, பக்கத்து வீட்டை சேர்ந்த பெண் மூலம், காப்பகத்தில் வசித்து வந்த ஐஸ்வர்யாவை காதலித்துள்ளார். பின்னர் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு, மதுரை வில்லாபுரம் பகுதியில் வசித்து வந்தனர்.
3 பேர் கைது
இதற்கிடையே, அலெக்ஸ்பாண்டி 3-வதாக திருமணம் செய்ய முயன்றதாக தெரிகிறது. இதற்கு ஐஸ்வர்யா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் ஐஸ்வர்யா, அலெக்ஸ் பாண்டியிடம் தகராறு செய்தார். கடந்த 1 வருடங்களுக்கு முன்பு, அவர்கள் சக்குடி அருகே உள்ள அனைஞ்சியூருக்கு இடம்பெயர்ந்தனர்.
அப்போது, மீண்டும் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில், ஐஸ்வர்யாவை அடித்துக்கொன்று, பிணத்தை வரிச்சியூர் அருகே கிணற்றுக்குள் வீசி உள்ளார். இதற்கு அவருடைய நண்பர்கள் கார்த்திக் பிரகாஷ் (20), ஆனந்த் (24) ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர். அவர்களும் கைது செய்யப்பட்டனர். மேலும் 2 பேரை தேடி வருகிறோம்" என்றனர்.