பெண் கொலை வழக்கில் அக்காள்-தம்பி உள்பட 3 பேர் கைது


பெண் கொலை வழக்கில் அக்காள்-தம்பி உள்பட 3 பேர் கைது
x

பேரணாம்பட்டு அருகே பெண் கொலை வழக்கில் அக்காள்-தம்பி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். கடனை திருப்பி கேட்டு, ஆபாசமாக பேசியதால் கொன்றதாக தெரிவித்துள்ளனர்.

வேலூர்

பேரணாம்பட்டு அருகே பெண் கொலை வழக்கில் அக்காள்-தம்பி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். கடனை திருப்பி கேட்டு, ஆபாசமாக பேசியதால் கொன்றதாக தெரிவித்துள்ளனர்.

பெண் கொலை

பேரணாம்பட்டு அருகே உள்ள பாஸ்மார் பெண்டாமலை கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது முதல் மனைவி வள்ளியம்மாள் (வயது 60). இவர் கடந்த 30-ந்தேதி அதே கிராமத்தில் நாராயணன் என்பவர் நிலத்தில் தலையில் பாறாங்கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து பேரணாம்பட்டு போலீசார் வழங்குப்பதிவு செய்தனர்.

இன்ஸ்பெக்டர் ராஜன் பாபு மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி அதே கிராமத்தை சேர்ந்த சின்னையன் (45), பாண்டு (55) ஆகிய 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சின்னையனின் அக்காள் ராஜேஸ்வரி (57) என்பவருக்கு வள்ளியம்மாள் ரூ.15 ஆயிரம் வட்டிக்கு பணம் கொடுத்து உதவியதாகவும், 29-ந்தேதி இரவு வள்ளியம்மாள், ராஜேஸ்வரியிடம் கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.

3 பேர் கைது

இதனை சின்னையன், பாண்டு ஆகியோர் தட்டிக்கேட்டனர். அதற்கு அவர்களை வள்ளியம்மாள் ஆபாசமாக பேசியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சின்னையனும், பாண்டுவும் சேர்ந்து வள்ளியம்மாளை தலையில் பாறாங்கல்லை போட்டு கொலை செய்ததாக தெரிவித்துள்ளனர்.

அதைத்தொடர்ந்து சின்னையன், பாண்டு, ராஜேஸ்வரி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து, குடியாத்தம் மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story