நிதி நிறுவன இயக்குனரின் பெற்றோர் உள்பட 3 பேர் கைது
நிதி நிறுவன இயக்குனரின் பெற்றோர் உள்பட 3 பேர் கைது
கோவை
கோவையில் நடந்த ரூ.1300 கோடி மோசடி வழக்கில் நிதிநிறுவன இயக்குனரின் பெற்றோர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தனியார் நிதிநிறுவனம்
கோவை அருகே உள்ள சூலூரை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 30). இவர் கடந்த 2017-ம் ஆண்டில் யுனிவர்சல் டிரேடிங் சொலியுசன் (யு.டி.எஸ்.) என்ற நிதிநிறுவனத்தை தொடங்கி நடத்தி வந்தார். இங்கு முதலீடு செய்தால் மாதந்தோறும் கூடுதல் வட்டி கொடுப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.
இதை நம்பி கோவை மாவட்டம் மட்டுமல்லாமல் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மற்றும் கேரளா, புதுச்சேரியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் முதலீடு செய்தனர். அவர்களுக்கு ஒருசில மாதங்கள் மட்டுமே வட்டி கொடுக்கப்பட்டது. பின்னர் கொடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.
ரூ.1,300 கோடி மோசடி
இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கோவை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அதில் ரமேஷ் மொத்தம் 76 ஆயிரத்து 597 பேரிடம் ரூ.1,300 கோடி மோசடி செய்தது தெரியவந்தது.
இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ரமேசை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து இந்த வழக்கை விசாரிக்க தனிப்பிரிவு தொடங்கப்பட்டது. இதற்காக துணை போலீஸ் சூப்பிரண்டு முருகானந்தம் மேற்பார்வையில் போலீஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
3 பேர் கைது
இதற்கிடையே இந்த மோசடியில் தொடர்புடைய ரமேசின் பெற்றோர் கோவிந்தராஜ் (வயது 66), லட்சுமி (56) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அதுபோன்று இந்த நிறுவனத்துக்கு ஏராளமான பொதுமக்களை முதலீடு செய்ய சேர்த்துவிட்ட கரூரை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியரான ஜஸ்டின் பிரபாகரன் (46) என்பவரும் கைது செய்யப்பட்டார்.
பின்னர் போலீசார் அந்த 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். தொடர்ந்து இந்த வழக்குகள் குறித்து விசாரைண நடத்தப்பட்டு வருகிறது.
இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறும்போது, யு.டி.எஸ். நிறுவன மோசடியில் ஏராளமானோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்து உள்ளது. எனவே அது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என்றனர்.