வெவ்வேறு விபத்துகளில் ரோட்டரி சங்க தலைவர் உள்பட 3 பேர் பலி
வெவ்வேறு விபத்துகளில் ரோட்டரி சங்க தலைவர் உள்பட 3 பேர் பலியானார்கள்.
வெவ்வேறு விபத்துகளில் ரோட்டரி சங்க தலைவர் உள்பட 3 பேர் பலியானார்கள்.
ரோட்டரி சங்க தலைவர்
மணப்பாறையை அடுத்த மலையடிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சேசு சகாயராஜ் (வயது 54). இவர் வண்ணாங்கோவில் அருகே உள்ள ஒரு தனியார் தொழிற்பயிற்சி மையத்தில் பணியாற்றி வந்தார். மேலும் இவர் வையம்பட்டி ரோட்டரி சங்க தலைவராகவும் உள்ளார்.
நேற்று சகாயராஜ் மோட்டார் சைக்கிளில் தொழிற்பயிற்சி மையத்திற்கு சென்று கொண்டிருந்தார். மறவனூர் அருகே சென்றபோது, பின்னால் வந்த வாகனம் ஒன்று அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது குறித்த புகாரின் பேரில் மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரெயிலில் அடிபட்டு மூதாட்டி பலி
மணப்பாறையை அடுத்த கலிங்கப்பட்டியை சேர்ந்தவர் சாமாத்தாள் (85). இவர் நேற்று முத்தபுடையான்பட்டி அருகே ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, அவர் ரெயிலில் அடிபட்டு இறந்து இருக்கலாம் என தெரிகிறது. இது குறித்த புகாரின் பேரில் திருச்சி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுவன் பலி
சோமரசம்பேட்டையை அடுத்த அதவத்தூர் சீத்தக்காடு கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது மகன், சிவக்குமார் (15). இவர் சோமரசம்பட்டையில் உள்ள இருசக்கர வாகனம் பழுதுநீக்கும் கடையில் வேலைபார்த்து வந்தார். நேற்று முன்தினம் காலையில் இவர் அதவத்தூர் பனையடி கருப்பு கோவில் அருகே மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்த மொபட் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிவக்குமார் நேற்று சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் சோமரசம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.