பெண்கள் உடைமாற்றும் அறையில் கேமரா இருந்த விவகாரம்: திருக்கோவிலூர் பிரபல ஜவுளிக்கடை மேலாளர் உள்பட 3 பேர் கைது - பரபரப்பு தகவல்கள்


பெண்கள் உடைமாற்றும் அறையில் கேமரா இருந்த விவகாரம்: திருக்கோவிலூர் பிரபல ஜவுளிக்கடை மேலாளர் உள்பட 3 பேர் கைது - பரபரப்பு தகவல்கள்
x
தினத்தந்தி 29 Jun 2023 12:15 AM IST (Updated: 29 Jun 2023 1:29 PM IST)
t-max-icont-min-icon

பெண்கள் உடைமாற்றும் அறையில் கேமரா இருந்த விவகாரத்தில் திருக்கோவிலூரில் உள்ள பிரபல ஜவுளிக்கடை மேலாளர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்,

உடை மாற்றும் அறையில் கேமரா செல்போன்

நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் இயங்கும் பிரபல ஜவுளிக் கடையின் கிளை கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் மேல வீதியில் திறக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது. இந்த கடைக்கு கடந்த 25-ந்தேதி ஜவுளி எடுக்க வந்த தேவனூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், அங்குள்ள உடைமாற்றும் அறைக்கு சென்றார். அப்போது அறையின் மேல்பகுதி ஏ.சி.வெண்டிலேட்டரில் கேமரா உள்ள செல்போன் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்ததுடன், அவர், இதுபற்றி கடை மேலாளர் விழுப்புரம் மாவட்டம் வெள்ளையம்பட்டு கிராமத்தை சேர்ந்த ராசாகண்ணு மகன் ஏழுமலை(வயது 31) என்பவரிடம் புகார் கூறியதுடன், திருக்கோவிலூர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார்.

இதைப்பார்த்த கடையில் பணிபுரியும் பெண் ஊழியர் உதயா(22) மற்றும் ஜவுளி எடுக்க வந்த மற்றொரு பெண்ணும் புகார் தெரிவித்த பெண்ணிடம் இருந்த செல்போனை பறித்தனர். மேலும் உதயா செல்போன் மெமரிகார்டை அப்புறப்படுத்தி, மறைத்ததாக கூறப்படுகிறது.

துப்புரவு பணியாளர் சிக்கினார்

இதுபற்றி தகவல் அறிந்த திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மனோஜ்குமார், இன்ஸ்பெக்டர்கள் ராதிகா, பாபு, சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவச்சந்திரன், ராஜசேகரன் ஆகியோர் கடைக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

மேலும் போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டனர். அப்போது கடையில் வேலைபார்க்கும் பெண் ஊழியர் உதயாவின் சகோதரரான, அதே கடையில் துப்புரவு பணியாளராக வேலை பார்க்கும் விக்னேஷ்(25) என்பவர் உடை மாற்றும் அறைக்குள் சென்று வந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் விக்னேசை பிடித்து விசாரணை நடத்தியபோது, சபல புத்தியால் கீழே கண்டெடுத்த செல்போனை உடைமாற்றும் அறையில் வைத்ததை ஒப்புக் கொண்டார். உதயாவிடம் நடத்திய விசாரணையில், செல்போன் தனது அண்ணன் வைத்திருந்தது என தெரியவந்ததால், அதனை பறித்ததுடன், மெமரிகார்டை எடுத்து, அவரை காப்பாற்ற முயன்றேன் என கூறினார்.

3 பேர் கைது

இதையடுத்து உடைமாற்றும் அறையில் செல்போனை ரகசியமாக மறைத்து வைத்த நெற்குணம் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த ராஜ் மகன் விக்னேஷ், தடயத்தை மறைத்து அவரை காப்பாற்ற முயன்றதாக அவருடைய தங்கை உதயா மற்றும் கடையின் மேலாளர் ஏழுமலை ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள். ஜவுளிக்கடையில் உள்ள உடைமாற்றும் அறையில் செல்போனை வைத்த விவகாரம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் திருக்கோவிலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைதான உதயா எம்.ஏ., பி.எட். பட்டதாரி என்பது குறிப்பிடத்தக்கது.

எந்த காட்சியும் பதிவாகவில்லை

இந்த விவகாரம் குறித்து போலீசார் கூறுகையில், உடை மாற்றும் அறையில் வைக்கப்பட்டது மெமரிகார்டு வசதியுள்ள சாதாரண கேமரா வசதி உள்ள செல்போன் ஆகும். அந்த செல்போனில் எந்த காட்சியும் பதிவாக வில்லை என்றனர்.

இந்த சம்பவம் குறித்து துரிதமாக விசாரணை நடத்தி கடை ஊழியர்கள் 3 பேரை கைது செய்ய நடவடிக்கை எடுத்த துணை போலீஸ் சூப்பிரண்டு மனோஜ்குமார் மற்றும் போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாராட்டினார்.


Next Story