கிராம நிர்வாக அலுவலர் உள்பட 3 பேர் கைது


கிராம நிர்வாக அலுவலர் உள்பட 3 பேர் கைது
x

புதுக்கோட்டை அருகே கஞ்சா கடத்தல் வழக்கில் கிராம நிர்வாக அலுவலர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

புதுக்கோட்டை

கஞ்சா கடத்தல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் கஞ்சா உள்பட போதை பொருட்கள் விற்பனையை தடுக்க போலீஸ் சூப்பிரண்டு வந்திதாபாண்டே உத்தரவின் பேரில், தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படையினர் ஆங்காங்கே ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்களை கைது செய்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு புதுக்கோட்டையை அடுத்த கேப்பரை அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட போது ஒரு காரை தனிப்படையினர் மடக்கி சோதனையிட்டனர். அதில் விற்பனைக்காக கஞ்சா கடத்தி செல்லப்படுவது தெரியவந்தது.

மேலும் காரில் இருந்த 3 பேரை பிடித்தனர். இதில் ஒருவர் கிராம நிர்வாக அலுவலர் ஆவார். அவரது பெயர் ஜெய ரவிவர்மா (வயது 34). இவர் கோவிலூர் பகுதி கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். மற்றொருவர் ஆட்டாங்குடியை சேர்ந்த கணேசன் (43) என்பதும், இவர் முன்னாள் ஊர்க்காவல்படை வீரர் எனவும் தெரிந்தது. மற்றொருவர் காரைக்குடியை சேர்ந்த சூர்யா (31) எனவும் தெரியவந்தது.

3 பேர் கைது

இதைத்தொடர்ந்து கார் மற்றும் காரில் இருந்த 1 கிலோ 700 கிராம் கஞ்சா, 4 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக வல்லாத்திராக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெய ரவிவர்மா, கணேசன், சூர்யா ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைதான 3 பேரையும் நேற்று சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், ``சூர்யா மதுரையில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து ஜெய ரவி வர்மாவிடம் கொடுத்துள்ளார். அவர் காரில் எடுத்து சென்று கஞ்சாவை விற்று வந்திருக்கிறார். இதற்கு உடந்தையாக கணேசனும் இருந்துள்ளார். மேலும் கஞ்சாவை பொட்டலமிட்டு ஆங்காங்கே விற்று வந்துள்ளனர். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது'' என்றனர்.


Next Story