தொழிலாளி உள்பட 3 பேர் தற்கொலை

பொள்ளாச்சி பகுதியில் வெவ்வேறு இடங்களில் தொழிலாளி உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி பகுதியில் வெவ்வேறு இடங்களில் தொழிலாளி உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கூலித்தொழிலாளி
பொள்ளாச்சி அருகே சூளேஸ்வரன்பட்டியை சேர்ந்தவர் ரமேஷ்குமார்(வயது 30). கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி குமாரி(26). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் ரமேஷ்குமார் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததால், மனைவியுடன் தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் குடிப்பழக்கத்தை கைவிட முடியாததால் மனமுடைந்த அவர், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பொள்ளாச்சி நகர கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நரம்பு தளர்ச்சி நோய்
இதேபோன்று பொள்ளாச்சி அருகே தொண்டாமுத்தூரை சேர்ந்தவர் கருப்பசாமி(வயது 53). இவர் அடிக்கடி மது குடித்து வந்ததால் நரம்பு தளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. பல இடங்களில் மருத்துவம் பார்த்தும், குணம் அடையாததால், வாழ்க்கையில் விரக்தி அடைந்த கருப்பசாமி, அந்த பகுதியில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண் தற்கொலை
பொள்ளாச்சியை அடுத்த சீனிவாசபுரம் அருகே உள்ள வசியாபுரத்தை சேர்ந்தவர் பைசல். ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி ஜீனத்(வயது 43). இவர் கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக தெரிகிறது. ஆனாலும் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த ஜீனத், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நகர மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






