சாராயம் விற்ற பெண்கள் உள்பட 3 பேர் கைது
சாராயம் விற்ற பெண்கள் உள்பட 3 பேர் கைது
கீழ்வேளூர் அருகே சாராயம் விற்ற பெண்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் சாராயம் கடத்தியவரும் சிக்கினார்.
ரோந்து பணி
நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உத்தரவின் பேரில் நாகை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காரைக்கால் பகுதியில் இருந்து சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் மாவட்டத்தில் 8 இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைத்து போலீசார் கண்காணிப்பு, வாகன சோதனை, ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாகை மாவட்டம் கீழ்வேளூர் போலீஸ் சரகம் ஓர்குடி பகுதியில் கீழ்வேளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஓர்குடி வெட்டாறு பாலம் அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் ஒரத்தூர் ஊராட்சி வடக்கு தெருவை சேர்ந்த அன்பழகன் மகன் அன்பரசன் (வயது 20) என்பதும், காரைக்காலில் இருந்து சாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது. இது குறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்பரசனை கைது செய்து அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயம், கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
3 பேர் கைது
இதேபோல் ராதாமங்கலம் ஊராட்சி நடுத்தெருவில் சாராயம் விற்ற அதே பகுதியை சேர்ந்த கொல்லகாட்டு குமார் மனைவி பூங்கொடி (50), பெருங்கடம்பனூர் மெயின் ரோட்டில் சாராயம் விற்ற பெருங்கடம்பனூர் மில்லடி தெருவை சேர்ந்த துரைராஜ் மகன் ஜெயராஜ் (43), சிக்கல் பனைமேடு மெயின் ரோட்டில் சாராயம் விற்ற அதே பகுதியை சேர்ந்த வேலாயுதம் மனைவி கண்ணகி (55) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து தலா 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.