கார் கவிழ்ந்து 3 பேர் படுகாயம்
கந்தர்வகோட்டை-பட்டுக்கோட்டை சாலையில் கார் கவிழ்ந்து 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
கார் கவிழ்ந்து விபத்து
தஞ்சை மாவட்டம் ஊரணிபுரம் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 31). இவர் தனது உறவினர்களான வேம்பாயி (58), மாரியம்மாள் (52) மற்றும் 2 குழந்தைகளுடன் காரில் திருச்செந்தூருக்கு சென்றார். காரை டிரைவர் சந்திரமோகன் ஓட்டி சென்றார். பின்னர் நேற்று அதிகாலை அவர்கள் திருச்செந்தூரில் இருந்து தஞ்சைக்கு திரும்பி சென்று கொண்டு இருந்தனர்.
கந்தர்வகோட்டை-பட்டுக்கோட்டை நெடுஞ்சாலையில் சென்றபோது டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக சென்றது. பின்னர் அந்த கார் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
3 பேர் படுகாயம்
இதில் காரில் பயணம் செய்த சந்திரசேகர், வேம்பாயி, மாரியம்மாள் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து, அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அவர்கள் 3 பேரையும் மீட்டு கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்த விபத்து குறித்து கந்தர்வகோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.