வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது
சாத்தூர் அருகே அரிவாளை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சாத்தூர்,
சாத்தூர் அருகே அரிவாளை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
செல்போன் பறிப்பு
சாத்தூர் அருகே உள்ள ரெங்கப்பநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ரமேஷ்பாபு (வயது 32). இவர் சாத்தூர் தாயில்பட்டி சாலையில் ரெங்கப்பநாயக்கன்பட்டி பஸ் ஸ்டாப் பகுதியில் நடைப்பயிற்சி செய்து கொண்டு இருந்தார்.
அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்தனர். அவர்களில் 2 பேர் முகவரி கேட்பது போல் ரமேஷ்பாபுவிடம் பேச்சு கொடுத்தனர். பின்னர் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை காட்டி மிரட்டி அவரது கையில் வைத்திருந்த செல்போனை பிடுங்கி அவரை கீழே தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது.
3 பேர் கைது
அப்போது அவர் சத்தம் போட்டார். உடனே அருகில் இருந்தவர்கள் ஓடி வருவதை கண்ட அவர்கள் தாங்கள் வந்த இரு சக்கர வாகனத்தில் தப்பிச்சென்றனர். இதுகுறித்து ரமேஷ்பாபு சாத்தூர் நகர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் மன்னார்கோட்டையை சேர்ந்த மகேந்திரன் (24), விருதுநகர் பாண்டியன் நகரை சேர்ந்த ஜீவானந்தம் (23), விருதுநகர் ரோசல்பட்டியை சேர்ந்த சக்திவேல் (22) என்பதும், வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
அத்துடன் அவர்கள் வழிப்பறிக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம், அரிவாள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.