பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் 3 பேருக்கு 7 ஆண்டு சிறை


பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் 3 பேருக்கு 7 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 12 Jun 2023 12:30 AM IST (Updated: 12 Jun 2023 9:03 PM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் 3 பேருக்கு 7 ஆண்டு சிறை

கோயம்புத்தூர்

கோவை

பாரதீய ஜனதா அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் 3 பேருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கு

கடந்த 2018-ம் ஆண்டு திரிபுரா மாநிலத்தில் லெனின் சிலை அகற்றப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்திலும் தந்தை பெரியார் சிலை அகற்றப்படும் என பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த ஒரு தலைவர் கருத்து வெளியிட்டு இருந்தார். அதனைத் தொடர்ந்து சில தினங்களில் திருப்பத்தூரில் பெரியார் சிலை பாரதீய ஜனதாவினரால் உடைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கோவையில் உள்ள பாரதீய ஜனதா கட்சி அலுவலகத்தின் மீது கடந்த 7.3.2018 அன்று பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன.

இது தொடர்பாக தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைப்பைச் சேர்ந்த கோபால், ஜீவா, கவுதம் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். வெடிபொருள் தடை சட்டத்தின்படியும் காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

7 ஆண்டு சிறை

இது தொடர்பான வழக்கு விசாரணை, கோவை குண்டுவெடிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கடந்த 5 ஆண்டுகளாக வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் நேற்று இந்த வழக்கின் தீர்ப்பு கூறப்பட்டது.

குற்றம்சாட்டப்பட்ட 3 பேருக்கும் 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 1,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி சசிரேகா தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் இந்த வழக்கில் கார்த்திகேயன் ஆஜர் ஆகி வாதாடினார். தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரும் கோவை சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story