கன்னங்குறிச்சியில் விவசாயி கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை சேலம் கோர்ட்டு தீர்ப்பு


கன்னங்குறிச்சியில்  விவசாயி கொலை வழக்கில்   3 பேருக்கு ஆயுள் தண்டனை  சேலம் கோர்ட்டு தீர்ப்பு
x

கன்னங்குறிச்சியில் விவசாயி கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

சேலம்

சேலம்,

விவசாயி கொலை

சேலம் கன்னங்குறிச்சி எல்.பி. செட்டி ஆறுமுகம் தெருவை சேர்ந்தவர் முருகேசன் (வயது 42). விவசாயியான அவர் ஆட்டோவும் ஓட்டி வந்தார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த உறவினரான சக்திகுமார் (28) என்பவருக்கும் இடையே பரம்பரை கிணற்றில் இருந்து நிலத்திற்கு தண்ணீர் எடுத்து விடுவது தொடர்பாக தகராறு இருந்து வந்தது.

இந்தநிலையில் கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 6-ந் தேதி முருகேசன் அதே பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சக்திகுமார், கந்தசாமி தெருவை சேர்ந்த முனியப்பன் (35), கோபால் (28), காட்டு வட்டம் பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் (27) ஆகியோர் முருகேசனை கல்லால் தாக்கியும், கத்தியால் குத்தியும் கொலை செய்தனர்.

ஆயுள் தண்டனை

இதுதொடர்பாக கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சக்திகுமார், முனியப்பன், கோபால், பன்னீர்செல்வம் ஆகியோரை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை சேலம் 2-வது கூடுதல் மாவட்ட அமர்வு கோர்ட்டில் நடந்தது. வழக்கு விசாரணையில் இருக்கும் போது கடந்த 2020-ம் ஆண்டு பன்னீர்செல்வம் இறந்து விட்டார்.

இந்த நிலையில் வழக்கில் விசாரணை அனைத்தும் முடிவடைந்ததால் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் குற்றம்சாட்டப்பட்ட சக்திகுமார், முனியப்பன், கோபால் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ரவி தீர்ப்பு அளித்தார்.


Next Story