பெயிண்டர் கொலை வழக்கில் 3 பேர் போலீசில் சரண்


பெயிண்டர் கொலை வழக்கில் 3 பேர் போலீசில் சரண்
x

சோமரசம்பேட்டை அருகே பெயிண்டர் கொலை வழக்கில் 3 பேர் போலீசில் சரண் அடைந் தனர்.

திருச்சி

சோமரசம்பேட்டை, ஜூன்.21-

சோமரசம்பேட்டை அருகே பெயிண்டர் கொலை வழக்கில் 3 பேர் போலீசில் சரண் அடைந் தனர்.

பெயிண்டர்

சோமரசம்பேட்டை அருகே உள்ள பள்ளக்காடு கிராமத்தை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 50). இவரது மனைவி பங்கஜவல்லி (47). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் ஆகாஷ் என்ற செல்வமாரி (19). பெயிண்டரான இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தாயனூரை சேர்ந்த அகிலா (21) என்ற பெண்ணை காதலித்து, திருமணம் செய்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புங்கனூர் பெரிய ஏரிக்கு அருகில் உள்ள வயலில் முகம் மற்றும் கை, கால்களில் காயங்களுடன் ஆகாஷ் பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த சோமரசம்பேட்டை இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் ஆகாஷ் கத்தரிக்கோலால் குத்திக்கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து நேற்றுமுன்தினம் பள்ளாகாடு பகுதியை சேர்ந்த ராமையா மகன்கள் லோகநாதன் (வயது 38), ரவிக்குமார், (28) மற்றும் இவர்களின் உறவினர் மருளாளிகாடுபகுதியை சேர்ந்த சேகர் மகன் ராஜமாணிக்கம் (27) ஆகிய 3 பேர் சோமரசம்பேட்டை போலீஸ்நிலையத்தில் சரண் அடைந்தனர்.

மேலும் விசாரணையில் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் 3 பேரும் சேர்ந்த ஆகாஷை கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.

கல்லூரி மாணவி மாயம்

*முசிறி அழகாபட்டி நேரு நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகள் ஸ்ரீ துர்கா (17). இவர் முசிறி அரசு அறிஞர் அண்ணா கலை கல்லூரியில் பி.ஏ. முதலாமாண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் கல்லூரிக்கு சென்று வருவதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்த புகாரின் பேரில் முசிறி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான ஸ்ரீதுர்காவை தேடி வருகின்றனர்.

வேன் பறிமுதல்

*திருச்சி-நாமக்கல் மெயின் ரோட்டில் மேய்க்கல்நாயக்கன்பட்டி பகுதியில் காட்டுப்புத்தூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, வேனில் மணல் கடத்தி வந்த ஏலூர்பட்டியை சேர்ந்த விக்னேஷ் என்பவரை கைது செய்து செய்து, வேனை பறிமுதல் செய்தனர்.

ஆண் பிணம்

*தொட்டியம் அருகே ஸ்ரீராமசமுத்திரம் காவிரியாற்றின் கரையில் உள்ள அரசமரப் பிள்ளையார் கோவில் அருகே இரட்டை வாய்க்கால் படித்துறையில் ் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். அவர் காவிரி ஆற்றில் குளிக்கும்போது, தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா?, மேலும் மேலும் அவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர் என காட்டுப்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆர்ப்பாட்டம்

*திருவெறும்பூர் கடை வீதியில் அக்னிபத் திட்டத்தை ரத்து செய்யக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தாலுகா செயலாளர் மல்லிகா தலைமை தாங்கினார். இதில் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

மோட்டார் சைக்கிள் திருட்டு

*திருச்சி, எடமலைப்பட்டிபுதூர், மாருதி நகர் விஸ்தரிப்பு பகுதியை சேர்ந்தவர் ஜோக்கின் காஸ்பார் (47). இவர் திருச்சியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவது வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிளை யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் எடமலைப்பட்டி புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை திருடிய ஆசாமியை தேடி வருகின்றனர்.


Next Story