மதுரையில் ஒரே மோட்டார்சைக்கிளில் பயணித்த 3 பேர்: கண்டெய்னர் லாரி மோதி 2 நண்பர்கள் பலி- ஒருவருக்கு தீவிர சிகிச்சை
மதுரையில் ஒரே மோட்டார் சைக்கிளில் பயணித்த 3 நண்பர்கள் கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் சிக்கினர். இதில் 2 பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த ஒருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஒரே மோட்டார் சைக்கிளில் பயணம்
மதுரை ரிங் ரோடு சாலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் கண்டெய்னர் லாரி ஒன்று மாட்டுத்தாவணி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர் திசையில் ஒரே மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் வந்தனர். கண் இமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள் மீது அந்த கண்டெய்னர் லாரி மோதியது. அதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு தலையில் படுகாயத்துடன் நடுரோட்டில் கிடந்தனர்.
2 பேர் பலி
தகவல் அறிந்து போலீசாரும், அக்கம்பக்கத்தினரும் விரைந்து சென்றனர். அங்கு 2 பேர் ரத்த வெள்ளத்தில் பலியாகி கிடந்தனர். மற்றொருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பலியான 2 பேர் உடல்களும் பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
நண்பர்கள்
மதுரையில் ஒரே மோட்டார் சைக்கிளில் பயணித்த 3 நண்பர்கள் கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் சிக்கினர். இதில் 2 பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த ஒருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் பற்றி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, பலியானவர்கள் குறித்து விசாரணை நடத்தினர்.
பெருங்குடி சோளங்குருணியை சேர்ந்த ஜெயமுருகன் மகன் ரஞ்சித் (வயது 16), கண்ணன் மகன் வீரசந்தானம் (18) மற்றும் சாரதி (17) ஆகிய 3 பேர் மோட்டார் சைக்கிளில் சென்றது தெரியவந்தது. விபத்தில் ரஞ்சித், வீரசந்தானம் இறந்துவிட்டனர். படுகாயம் அடைந்த சாரதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் சிக்கிய 3 பேரும் நண்பர்கள் ஆவர். விபத்து ஏற்படுத்திய கண்டெய்னர் லாரி டிரைவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.