போலி ரசீது தயாரித்து பணம் வசூலித்த 3 பேர் கைது
கோவில் கட்டுவதாக போலி ரசீது தயாரித்து பணம் வசூலித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பத்தூர் அருகே ஜொல்லகவுண்டனூர் கிராமத்தில் 5 பேர் கொண்ட குழுவினர் கோவில் கட்டுவதாக அப்பகுதி பொதுமக்களிடையே பணம் வசூலித்தனர்.
அப்போது அவர்களின் நடத்தையில் சந்தேகமடைந்த பொதுமக்கள், எங்கு கோவில் கட்டுகிறீர்கள் என கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள் உரிய பதில் அளிக்கவில்லை. உடனே அப்பகுதி மக்கள் அவர்களை சுற்றி வளைத்துப் பிடித்தனர். அதில் இருவர் தப்பி ஓடி விட்டனர். பிடிபட்ட 3 பேரையும் குரிசிலாப்பட்டு போலீசில் ஒப்படைத்தனர்.
போலீஸ் விசாரணையில், அவர்கள் ஆம்பூர் வாணித்தெருவை சேர்ந்த ஆகாஷ் (வயது 22), துத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்த லோகேஷ் (26), குடியாத்தம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த பூபதி (42) என்பதும், அவர்கள் போலியாக ரசீது தயார் செய்து பணம் வசூல் செய்தது தெரிந்தது. இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவான 2 பேரை தேடி வருகின்றனர்.