போதை மாத்திரை விற்ற 3 பேர் கைது
போதை மாத்திரை விற்ற 3 பேர் கைது
கோவை
கல்லூரி மாணவர்கள், இளைஞர்களை குறிவைத்து போதை மாத்திரை விற்பனை செய்த 3 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
போதை மாத்திரை பழக்கம்
கோவை மாநகரில் கல்லூரிகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன. இங்கு வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் வந்து கோவையில் தங்கி கல்லூரிகளில் படித்தும், தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்தும் வருகின்றனர். கொரோனா கால கட்டத்துக்கு பிறகு கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் வலி நிவாரணி மாத்திரைகளை, போதை மாத்திரையாக பயன்படுத்தும் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போதைக்கு அடிமையாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க மாநகர போலீசார் கல்லூரிகளில் போதை பழக்கம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள். மேலும் போதை மாத்திரைகளை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து விற்பனை செய்யும் கும்பலையும் கைது செய்து வருகின்றனர். இது வரை கோவை மாநகரில் மட்டும் 40-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். தொடர்ந்து போலீசார் கண்காணிப்பு பணியினை மேற்கொண்டு வருகிறார்கள்.
3 பேர் கைது
இந்தநிலையில் கோவை மசக்காளிப்பளையம் மாநகராட்சி பள்ளி அருகே சிலர் போதை மாத்திரைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக சிங்காநல்லூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சிங்காநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கஸ்தூரி தலைமையிலான போலீசார் தகவல் வந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்து கொண்டு இருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர்.
அதில் அவர்கள், ரத்தினபுரியை சேர்ந்த சியாம் என்ற யாசின் (வயது 28), போத்தனூர் திருமறை நகரை சேர்ந்த அன்வர் சாதிக் (28), கரும்புக்கடையை சேர்ந்த சுல்தான் பாட்ஷா (27) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரை போலீசார் கைதுசெய்தனர். இவர்களிடம் இருந்து 258 போதை மாத்திரைகள், 32 பாட்டில் சோடியம் குளோரைடு மற்றும் 10 ஊசி, 14 சிரஞ்சு ஆயிவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.