லாரியில் 7,500 கிலோ ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது
லாரியில் 7,500 கிலோ ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது
கபிஸ்தலம்
சுவாமிமலை அருகே வாகன சோதனையில் லாரியில் 7,500 கிலோ ரேஷன் அரிசி கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
வாகன சோதனை
தஞ்சை மாவட்டம் சுவாமிமலை கொட்டையூர் ரவுண்டானா பகுதியில் சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவ.செந்தில்குமார் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த லாரியை மறித்து சோதனை செய்தனர். அப்போது லாரியில் 150 மூட்டையில் 7500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. பின்னர் நடத்திய விசாரணையில், அந்த லாரி திருவையாறில் இருந்து கும்பகோணம் நோக்கி ரேஷன் அரிசிகளை ஏற்றி வந்ததும், ரேஷன் அரிசி ஏற்றி வந்த மூட்டைகளுக்கு முறையான ரசீது எதுவும் இல்லாமல் இருந்ததும் தெரியவந்தது.
3 பேர் கைது
இதையடுத்து சுவாமிமலை போலீசார், லாரியில் ரேஷன் அரிசி கடத்திய கொத்தங்குடியை சேர்ந்த ஆனந்தராஜ் மகன் வீரமணி(வயது20), மேல காவேரி பகுதியை சேர்ந்த வீரமுத்து மகன் மகேஸ்வரன்(20), தேவனாஞ்சேரியை சேர்ந்த சண்முகம் மகன் விவேக்(20) ஆகிய 3 ேபரை கைது செய்து, அவர்களிடம் இருந்து கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி மற்றும் 7,500 கிலோ ரேஷன் அரிசி ஆகியவற்றை பறிமுதல் செய்து சட்டப்பூர்வ நடவடிக்கைக்காக தஞ்சை உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்தனர்.