மதுரையில் காரில் பதுக்கி கஞ்சா எண்ணெய் கடத்திய 3 பேர் கைது
மதுரையில் காரில் பதுக்கி கஞ்சா எண்ணெய் கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்
மதுரை காளவாசல் சந்திப்பில் போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனத்தை நிறுத்தினர். அதில் 3 வாலிபர்கள் குடிபோதையில் இருந்தது போலீசாருக்கு தெரிய வந்தது. மேலும் போலீசாருக்கு அவர்கள் மீது சந்தேகப்பட்டு காரை சோதனை செய்தனர். அந்த காருக்குள் அரசால் தடை செய்யப்பட்ட 230 கிராம் கஞ்சா எண்ணெய் 3 சிறிய டப்பாவில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே போக்குவரத்து போலீசார் அவர்கள் 3 பேரையும் கரிமேடு போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவர்களிடம் விசாரித்த போது அய்யர்பங்களாவை சேர்ந்த மார்ட்டின், ஆத்திக்குளத்தைச் சேர்ந்த விக்னேஷ், பேங்க் காலனியை சேர்ந்த வெங்கடேஷ் என்பது தெரிய வந்த்து. மேலும் திருச்சியை சேர்ந்த சரண் என்பவர் தங்களது காரில் கஞ்சா எண்ணெய்யை மறைத்து வைத்ததாக அவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 3 பேரையும் கைது செய்து, கார் மற்றும் கஞ்சா எண்ணெய்யை பறிமுதல் செய்தனர்.