சாராயம் கடத்தி வந்த 3 பேர் கைது
கீழ்வேளூர் அருகே சாராயம் கடத்தி வந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன
சிக்கல்:
கீழ்வேளூர் அருகே சாராயம் கடத்தி வந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சாராயம் விற்பனை
நாகை மாவட்டத்தில் சாராய கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உத்தரவிட்டார். அதன்பேரில் நாகை மாவட்டத்தில் 8 இடங்களில் காரைக்கால் பகுதியில் இருந்து சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் சோதனை சாவடிகள் அமைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே சங்கமங்கலம் பகுதியில் கீழ்வேளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சங்கமங்கலம் நேரடி நெல் கொள்முதல் நிலையம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
3 பேர் கைது
விசாரணையில் அவர்கள் சங்கமங்கலம் அருகே உள்ள பழையனூர் மேல்பாதியை சேர்ந்த ராஜநாகூரான் மகன் சத்யராஜ் (வயது32), திருக்கண்ணங்குடி திருவாசல்படி தெருவை சேர்ந்த ஜெகன்னாதர் மகன் ராம்குமார் (32) ஆகியோர் என்பதும், இவர்கள் காரைக்காலில் இருந்து சாராயம் கடத்தி வந்ததும் தெரியவந்தது.
இதேபோல் பட்டமங்கலம் மெயின் சாலை பகுதியில் வாய்க்கால் மதகடி அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்தி வந்த பட்டமங்கலம் புழுதிக்குடி ரோடு பகுதியை சேர்ந்த தங்கமணி மகன் மணிமாறன் (23) என்பவரும் போலீசில் பிடிபட்டார். இது குறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து, 220 லிட்டர் சாராயம், மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.