டாஸ்மாக் கடையில் திருடிய 3 பேர் அதிரடி கைது
சுல்தான்பேட்டை அருகே டாஸ்மாக் கடையில் திருடிய 3 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
சுல்தான்பேட்டை
சுல்தான்பேட்டை அருகே டாஸ்மாக் கடையில் திருடிய 3 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
டாஸ்மாக் கடையில் திருட்டு
கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை அருகே பூராண்டாம்பாளையத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு கடந்த ஜூலை மாதம் 7-ந் தேதி இரவில் மர்ம ஆசாமிகள் புகுந்து, 16 மது பாட்டில்கள் மற்றும் கண்காணிப்பு கேமரா ஹார்டு டிஸ்குகளை திருடி சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் சுல்தான்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வந்தனர். மேலும் சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதையன் மேற்பார்வையில் சுல்தான்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் பல்வேறு இடங்களில் தேடுதல் வேட்டை நடத்தினர்.
3 பேர் கைது
இதற்கிடையில் நேற்று பச்சாக்கவுண்டம்பாளையம் பகுதியில் வாகன சோதனை நடத்தியபோது, அந்த வழியாக ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள், திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே முத்துநாயக்கன்பட்டியை சேர்ந்த வெல்டர் சிவசங்கர் என்ற பால்பாண்டி(வயது 23), மடத்துக்குளம் அருகே கணேசபுரத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி முருகானந்தம்(22), பழனி அருகே நாகூரை சேர்ந்த விவசாயி விக்னேஷ்(31) ஆகியோர் என்பதும், பூராண்டாம்பாளையத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் திருட்டில் ஈடுபட்டவர்கள் என்பதும் தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள், ரூ.4 ஆயிரத்து 250 மதிப்பிலான மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் மீது மடத்துக்குளம், கணியூர் உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.