தனியார் நிறுவன ஊழியரை தாக்கிய தம்பதி உள்பட 3 பேர் கைது


தனியார் நிறுவன ஊழியரை தாக்கிய தம்பதி உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 18 July 2023 2:30 AM IST (Updated: 18 July 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

தனியார் நிறுவன ஊழியரை தாக்கிய தம்பதி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோயம்புத்தூர்


சரவணம்பட்டி


கோவை கோவில்பாளையம் ராமன்குட்டை பகுதியை சேர்ந்தவர் சேவுகராஜன். இவரது மனைவி உமாதேவி (வயது 32). இவர்கள் கமால் என்ற கிருஷ்ணமூர்த்தி (44) என்பவரது வீட்டில் கடந்த 3 ஆண்டுகளாக போக்கியத்திற்கு குடியிருந்து வருகின்றனர். இந்த நிலையில் போக்கிய ஒப்பந்த தேதி கடந்த ஜனவரி மாதம் முடிவடைந்துள்ளது. அதனைத்தொடர்ந்து சேவுகராஜன், வீட்டு உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தியிடம் நாங்கள் வீட்டை காலி செய்து கொள்கிறோம். அதனால் போக்கியத்திற்கு உண்டான பணத்தை திரும்ப கொடுங்கள் என்று கேட்டுள்ளார். ஆனால் கிருஷ்ணமூர்த்தி இன்று வரை பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்து வந்துள்ளார்.


சம்பவத்தன்று சேவுகராஜன் மற்றும் உமாதேவி ஆகியோர் கிருஷ்ணமூர்த்தியிடம் மீண்டும் பணத்தை கேட்டுள்ளனர். இதற்கு கிருஷ்ணமூர்த்தி திருப்பி தருவதற்கு கால அவகாசம் கேட்டுள்ளார். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் கிருஷ்ணமூர்த்தி, அவரது மனைவி மற்றும் சம்சுதீன் (42) ஆகியோர் சேவுகராஜனை தாக்கி உள்ளனர். இதில் சேவுகராஜனுக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து உமாதேவி கோவில்பாளையம் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் கிருஷ்ணமூர்த்தி, அவரது மனைவி மற்றும் சம்சுதீன் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story