பெண்களிடம் நகை பறித்த வாலிபா்கள் உள்பட 3 பேர் கைது


பெண்களிடம் நகை பறித்த வாலிபா்கள் உள்பட 3 பேர் கைது
x

ஈரோட்டில் பெண்களிடம் நகை பறித்த வாலிபர்கள் உள்பட 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 4½ பவுன் நகையையும், 9 இருசக்கர வாகனங்களையும் மீட்டனர்.

ஈரோடு

ஈரோட்டில் பெண்களிடம் நகை பறித்த வாலிபர்கள் உள்பட 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 4½ பவுன் நகையையும், 9 இருசக்கர வாகனங்களையும் மீட்டனர்.

நகை பறிப்பு

ஈரோடு சாஸ்திரிநகர் லெனின் வீதியை சேர்ந்தவர் சங்கா் ராவ். இவருடைய மனைவி ஜமுனா ராணி (வயது 61). இவர் கடந்த மாதம் 24-ந் தேதி மதியம் லெனின் வீதியில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் 2 பேர் மெதுவாக வந்தனர். ஆட்கள் நடமாட்டம் இல்லாத சமயத்தில் மோட்டார் சைக்கிளில் பின்னால் உட்கார்ந்து இருந்த நபர் ஜமுனாராணி அணிந்து இருந்த 1½ பவுன் சங்கிலியை பறித்தார். பிறகு அந்த நபர்கள் 2 பேரும் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.

இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்த மர்மநபர்களை வலைவீசி தேடி வந்தனர். அப்போது அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான வீடியோ காட்சிகளை பார்வையிட்டு போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் ஏற்கனவே பல்வேறு வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டவர்களே இதிலும் கைவரிசையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின்பேரில் ஈரோடு டவுன் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆறுமுகம் மேற்பார்வையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோமதி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

3 பேர் கைது

இந்த தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரின் மகன் தருண் (21), ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு பகுதியை சேர்ந்த தமிழ்செல்வன் (23) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 2 வாலிபர்களையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் 2 பேரும் ஈரோட்டில் ஜமுனா ராணியிடம் 1½ பவுன் நகையை, சித்தோட்டில் ஒரு பெண்ணிடம் இருந்து 3 பவுன் நகையை பறித்ததும், இருசக்கர வாகனங்களை திருடிவிட்டு, அதே வாகனத்தில் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததும், இந்த வாகனங்களை ஈரோடு லக்காபுரம் மேற்கு வீதியை சேர்ந்த பாலுசாமி (45) என்பவரிடம் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து தருண், தமிழ்செல்வன், பாலுசாமி ஆகிய 3 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மொத்தம் 4½ பவுன் நகை, 9 இருசக்கர வாகனங்கள் மீட்கப்பட்டன.


Related Tags :
Next Story