வாலிபரை ஏமாற்றி திருமணம் செய்து 8¾ பவுன் நகைகள், ரூ.2½ லட்சத்தை பறித்த பெண்கள் உள்பட 3 பேர் கைது
கரூரில் வாலிபரை ஏமாற்றி திருமணம் செய்து 8¾ பவுன் நகைகள், ரூ.2½ லட்சத்தை பறித்த பெண்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்..
திருமணம் செய்த வாலிபர்
கரூர் பசுபதிபாளையத்தை சேர்ந்தவர் விக்னேஸ்வரன் (வயது 30). இவர் திருமணம் செய்வதற்காக பெண் பார்த்து வந்துள்ளார். இதுகுறித்து அறிந்த கரூரை சேர்ந்த கல்யாண புரோக்கர் ஒருவர், விக்னேஸ்வரனிடம் எனக்கு தேனி மாவட்டத்தில் தெரிந்த ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த பெண் ஒருவர் அவரது சித்தியுடன் இருப்பதாகவும், அவரை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியுள்ளார்.
இதனை நம்பிய விக்னேஸ்வரன், புரோக்கர் கூறிய, தேனி மாவட்டம் கம்பம் பகுதியை சேர்ந்த பொன்தேவி (25) என்ற பெண்ணிற்கு 8¾ பவுன் நகைகள் மற்றும் ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் கொடுத்து கடந்த பிப்ரவரி மாதம் 12-ந்தேதி கரூரில் வைத்து திருமணம் செய்துள்ளார்.
நகை-பணத்துடன் மாயம்
இதனையடுத்து விக்னேஸ்வரனும், பொன் தேவியும் ராயனூர் பாலாஜி நகரில் தனி வீடு எடுத்து 2 நாட்கள் குடும்பம் நடத்தி உள்ளனர். இதனையடுத்து பொன்தேவி, விக்னேஸ்வரனிடம் சிவகாசியில் உள்ள தனது சித்தி வீட்டிற்கு சென்று வரலாம் என கூறி, பணம்-நகையுடன் பொன்தேவியும், விக்னேஸ்வரனும் கரூரில் இருந்து சிவகாசிக்கு புறப்பட்டு சென்றனர். இதற்கிைடயில், பொன்தேவி திடீரென 8¾ பவுன் நகைகள் மற்றும் ரூ.2 லட்சத்து 40 ஆயிரத்துடன் மாயமானார். இதையடுத்து விக்னேஸ்வரன் தனது மனைவியை காணவில்லை என சிவகாசி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். பின்னர் கரூருக்கு வந்து தாந்தோணிமலை போலீஸ் நிலையத்திலும் புகார் கொடுத்துள்ளார்.
விசாரணை
இந்நிலையில் மதுரையில் சந்தேகம் படும்படி சுற்றித்திரிந்த 3 பேரை மதுரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் தேனி கம்பம் பகுதியை சேர்ந்த பொன்தேவி, விருதுநகர் மாவட்டம் நத்தத்து பட்டியை சேர்ந்த அமிர்தவல்லி (45), விருதுநகர் மாவட்டம் மீனாட்சி நகரை சேர்ந்த பாலமுருகன் (43) என்பதும், கரூரை சேர்ந்த விக்னேஸ்வரனிடம் 8¾ பவுன் நகைகள் மற்றும் ரூ.2 லட்சத்து 40 ஆயிரத்தை ஏமாற்றி பறித்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து மதுரை போலீசார் தாந்தோணிமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
3 பேர் கைது
இதையடுத்து தாந்தோணிமலை போலீசார் மதுரைக்கு சென்று பொன்தேவி, அமிர்தவல்லி, பாலமுருகன் ஆகிய 3 பேரையும் தாந்தோணிமலை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிந்து அவர்களை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் பொன்தேவி பல ஆண்களை ஏமாற்றி பணம்-நகைகளை பறித்ததும் தெரியவந்துள்ளது. இதுகுறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கரூர் பகுதியில் பெரும் பரபரப்ைைப ஏற்படுத்தி உள்ளது.