சிறுவன் கொலை வழக்கில் 3 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை
சிறுவன் கொலை வழக்கில் 3 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து திருப்பத்தூர் கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
சிறுவன் கொலை
கர்நாடக மாநிலம், பெங்களூருவை சேர்ந்தவர் பார்த்தசாரதி. இவரது மகன் அபினவ் (வயது 17). இவர் 10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு கிடைக்கும் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி 16-ந் தேதி திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே ஏலகிரி கிராமம் அம்பேத்கர் நகரில் வசிக்கும் தனது பெரியம்மா கலைச்செல்வி என்பவரது வீட்டிற்கு வந்திருந்தார்.
அன்று மாலை அபினவ் மற்றும் தனது பெரியம்மா மகன் முகேஷ் (23) ஆகிய 2 பேரும் மோட்டார் சைக்கிளில் பால்னாங்குப்பம் கிராமம் சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அம்பேத்கர் நகரை சேர்ந்த கண்ணுபையன் மகன்கள் குமார் (30), தயாள் (27) மற்றும் வடிவேல் மகன் ராகுல் (23) ஆகிய 3 பேரும் சேர்ந்து முகேஷ் ஓட்டி வந்த மோட்டார்சைக்கிளை வழிமறித்து தகராறு செய்தனர்.
இதனால் இருதரப்பினருக்கும் இடையே சிறு மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த குமார், தயாள், ராகுல் ஆகிய 3 பேரும் சேர்ந்து அன்று இரவு அபினவை இருள் சூழ்ந்த பகுதிக்கு இழுத்து சென்று சரமாரியாக கத்தியால் குத்தி படுகொலை செய்தனர்.
3 பேர் கைது
மேலும் அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த முகேஷ் மற்றும் அவரது தாய் கலைச்செல்வி இருவரையும் அவர்கள் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஒடிவிட்டனர்.
இதுகுறித்து கலைச்செல்வி கொடுத்த புகாரின் பேரில், ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து குமார், தயாள், ராகுல் ஆகிய 3 பேரையும் கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு திருப்பத்தூர் 3-வது மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது.
இரட்டை ஆயுள் தண்டனை
இந்த வழக்கின் இறுதி விசாரணை நேற்று நடந்தது. இதில், அபினவை கொலை செய்தது குமார், தயாள், ராகுல் என்பது உறுதியானது. அதைத்தொடர்ந்து கொலையாளிகளான 3 பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ,10 ஆயிரம் அபராதமும் விதித்து, அபராத்தை கட்ட தவறினால் 6 மாதம் சிறை தண்டனை விதித்து மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி மீனா குமாரி உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் அரசு தரப்பில் குற்றவியல் வக்கீல் பி.டி.சரவணன் ஆஜரானார்.