பெண்ணிடம் 3 பவுன் சங்கிலி பறிப்பு
பெண்ணிடம் 3 பவுன் சங்கிலி பறிப்பு நடந்துள்ளது.
நொய்யல்,
கரூர் மாவட்டம் கந்தம்பாளையம் அருகே வள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரி (வயது 50). இவர் சேலம்- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் மூலிமங்கலம் பிரிவு அருகே டீக் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தனது டீக்கடையை பூட்டுவதற்காக பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தார். அப்போது சுமார் 25 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கடைக்கு வந்துள்ளார். அப்போது கடைக்குள் ஈஸ்வரி திரும்பி பொருளை எடுத்துக் கொண்டிருந்தபோது திடீரென அந்த வாலிபர் ஈஸ்வரி அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து ஈஸ்வரி வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்குப்பதிவு செய்து தங்கசங்கிலியை பறித்து சென்ற மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றார்.