மர்மமான முறையில் வயல்வெளியில் செத்துக்கிடந்த 3 சினை மாடுகள்


மர்மமான முறையில் வயல்வெளியில் செத்துக்கிடந்த 3 சினை மாடுகள்
x

மர்மமான முறையில் வயல்வெளியில் 3 சினை மாடுகள் செத்துக்கிடந்தன.

திருச்சி

கொள்ளிடம் டோல்கேட்:

திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் அருகே உள்ள பழூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் சின்னத்தம்பி(வயது 45), செந்தில் (40), தங்கராசு (50). கூலி தொழிலாளர்கள். இவர்களுக்கு சொந்தமான தலா ஒரு பசு மாடு வீதம் 3 பசுமாடுகள் நேற்று முன்தினம் காலை மேய்ச்சலுக்கு சென்றன. பின்னர் அவை வீடு திரும்பவில்லை. இரவு முழுவதும் தேடியும் மாடுகள் கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று காலை ஊருக்கு அருகில் உள்ள வயல்வெளியில் அந்த மாடுகள் வாயில் நுரை தள்ளிய நிலையில், ஆங்காங்கே செத்து கிடந்தன. இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த மாடுகளின் உரிமையாளர்கள், மாடுகளை கட்டிபிடித்து அழுதது ேசாகத்தை ஏற்படுத்தியது. பின்னர் இது குறித்து மாடுகளின் உரிமையாளர்கள், கொள்ளிடம் போலீசில் தனித்தனியாக புகார் அளித்தனர். அதன் பேரில் இறந்த பசுக்களை போலீசார் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். வயல்வெளியில் தெளிக்கப்பட்டிருந்த ஏதோ ஒருவகை மருந்தை (விஷம்) மாடுகள் தின்று இறந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். இந்த சம்பவம் குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த 3 மாடுகளும் சினையாக இருந்ததாக அதன் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.


Next Story