மதுரை விமான நிலையத்திற்கு அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் 3 ஆம்புலன்சுகள்-இயக்குனர் தொடங்கி வைத்தார்


மதுரை விமான நிலையத்திற்கு அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் 3 ஆம்புலன்சுகள்-இயக்குனர் தொடங்கி வைத்தார்
x

மதுரை விமான நிலையத்திற்கு அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட 3 ஆம்புலன்சுகளை விமான நிலைய இயக்குனர் நேற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

மதுரை


மதுரை விமான நிலையத்திற்கு அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட 3 ஆம்புலன்சுகளை விமான நிலைய இயக்குனர் நேற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

மதுரை விமான நிலையம்

தென் மாவட்டங்களில் முக்கியமான விமான நிலையமாக மதுரை விமான நிலையம் இருக்கிறது. இங்கிருந்து சென்னை, பெங்களூரு, மும்பை, டெல்லி போன்ற உள்நாட்டு நகரங்களுக்கும், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் விமான சேவை நடைபெற்று வருகிறது. இதனால், நாளொன்றுக்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகள் மதுரை விமான நிலையம் வந்து செல்கின்றனர்.

இந்தநிலையில் மதுரை விமான நிலையத்திலிருந்து மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு சுமார் 18 கிலோமீட்டர் தொலைவு இருக்கிறது. இதனால், மதுரை விமான நிலையத்திற்கு வரும் விமான பயணிகளுக்கு ஏதேனும் அவசர கால மருத்துவ உதவி தேவைப்பட்டால், மதுரை ஆஸ்பத்திரியில் இருந்து 108 ஆம்புலன்சு வருவது தாமதம் ஏற்பட்டு வந்தது.

இதனால் மதுரை விமான நிலையத்தின் அருகில் உள்ள தனியார் மருத்துவமனை ஆம்புலன்சுகளை நாட வேண்டிய நிலை இருந்தது. இதற்கிடையே, விமானத்தில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பிற்காகவும், அவசர காலத்தில் உதவும் வகையில் மதுரை விமான நிலையத்திற்கு என தனி ஆம்புலன்சுகள் வேண்டுமென மதுரை விமான நிலைய ஆலோசனை கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.

3 ஆம்புலன்சுகள்

இதனைத் தொடர்ந்து மத்திய அரசு இந்திய விமான நிலையங்களின் ஆணையக் குழு, மதுரை விமான நிலையத்திற்கென அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட குளிரூட்டப்பட்ட 3 ஆம்புலன்சுகளை வழங்கி உள்ளது. இந்த 3 ஆம்புலன்சுகளை, மதுரை விமான நிலைய இயக்குனர் கணேசன் நேற்று தொடங்கி வைத்து, மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், விமான நிலைய அதிகாரிகள், ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், ஏப்ரல் மாதத்தில் இருந்து 24 மணி நேரமும் செயல்படும் விமான நிலையமாக மதுரை உள்ளது. தற்போது வரை இரவு நேர விமான சேவை இல்லை. ஆனால், வரும் காலங்களில், இரவு நேரத்தில் பயணிகள் யாருக்காவது, ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்வதற்கு வசதியாக இந்த ஆம்புலன்சுகள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், அதற்கு தேவையான பணியாளர்களும் இருக்கின்றனர். இதன் மூலம் மதுரைக்கு வந்து செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உண்டாகும் என்றனர்.


Next Story