கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி 3 மாணவர்கள் பலியான வழக்கு:குருகுல வார்டனுக்கு முன்ஜாமீன் அளிக்க முடியாது- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி 3 மாணவர்கள் பலியான வழக்கு:குருகுல வார்டனுக்கு முன்ஜாமீன் அளிக்க முடியாது- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி 3 மாணவர்கள் பலியான சம்பவத்தில் தொடர்பு இருப்பதால், குருகுலத்தின் வார்டனுக்கு முன்ஜாமீன் அளிக்க முடியாது என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை


கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி 3 மாணவர்கள் பலியான சம்பவத்தில் தொடர்பு இருப்பதால், குருகுலத்தின் வார்டனுக்கு முன்ஜாமீன் அளிக்க முடியாது என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

ஆற்றில் மூழ்கிய மாணவர்கள்

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் உள்ள பாடசாலையில் படித்த விஷ்ணுபிரசாத் உள்பட 3 மாணவர்கள், கடந்த மாதம் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்தனர். அதில் குருகுலத்தின் பத்ரிநாராயணன், வார்டன் சீனிவாசராவ் ஆகியோர் சேர்க்கப்பட்டு இருந்தனர். தற்போது இவர்கள் இருவரும் தங்களுக்கு முன்ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

அந்த மனுவில் கூறியிருந்ததாவது:-

எங்கள் குருகுலத்தில் மொத்தம் 15 மாணவர்கள் படித்தனர். அவர்களுக்கு இலவசமாக உணவு, தங்கும் இடம், கல்வி ஆகியவை வழங்கப்பட்டன. அவர்கள் அனைவரையும் முறையாக பராமரித்தோம். மாணவர்கள் அனைவரும் நாள்தோறும் கொள்ளிடம் ஆற்றுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.

அதிகளவு தண்ணீர் திறப்பு

சம்பவத்தன்று காவிரியில் அதிகளவு நீர் திறந்துவிடப்பட்டு, அது கொள்ளிடம் ஆற்றில் வந்தது. அந்த தண்ணீரில் சிக்கி 3 மாணவர்கள் மூழ்கினர். எதிர்பாராத காரணத்தினால் இந்த சம்பவம் நடந்ததால், இந்த வழக்கில் முன்ஜாமீன் அளித்து உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர்.

இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு வக்கீல் அன்புநிதி ஆஜராகி, குருகுல நிர்வாகிகளின் கவனக்குறைவால்தான் 3 பேர் இறந்து இருப்பதாக வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர்களுக்கு முன்ஜாமீன் அனுமதிக்கக்கூடாது என வாதாடினார்.

வார்டன் மனு தள்ளுபடி

விசாரணை முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

குருகுலத்தின் வார்டன், தினந்தோறும் அங்குள்ள மாணவர்களை அதிகாலையில் கொள்ளிடம் ஆற்றில் குளிக்க வைப்பது வழக்கம். மாணவர்கள் தவறு செய்தால், உப்பு இல்லாத உணவு அளிப்பது, கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் எடுத்துவர செய்வது போன்ற தண்டனை அளித்ததாக மாணவர்கள் வாக்குமூலம் அளித்து உள்ளனர். அதுபோல சம்பவத்தன்று ஆற்றில் தண்ணீர் எடுக்கச்சென்ற 3 மாணவர்கள் வெள்ளத்தில் சிக்கி இறந்து உள்ளனர். அவர்களின் இறப்பு சம்பவத்துக்கு வார்டனின் கவனக்குறைவும் காரணம்.

எனவே வார்டன் சீனிவாசராவ்விடம் போலீசார் விசாரணை செய்வது அவசியம் என்பதால், அவருக்கு முன்ஜாமீன் அளிக்க முடியாது. அவரது மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. குருகுலத்தின் நிறுவனர் பத்ரிநாராயணனுக்கு நிபந்தனை முன்ஜாமீன் அளிக்கப்படுகிறது.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story