கோவிந்தம்மாள் ஆதித்தனார் கல்லூரி மாணவிகள் 3 பேருக்கு தங்கப்பதக்கம்
திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் கல்லூரி மாணவிகள் 3 பேருக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி மாணவிகள் பாத்திமா ஜாஹ்ரா, திவ்யா, ஜெயரூபி ஆகிய 3 பேரும் தங்கப்பதக்கம் பெற்றனர்.
காயல்பட்டினத்தை சேர்ந்த மாணவி பாத்திமா ஜாஹ்ரா கடந்த 2019-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரையிலான கல்வி ஆண்டில் பி.ஏ. பொருளாதாரம் படித்து முடித்துள்ளார். இவருக்கு நேற்று நடந்த விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி 2 தங்கப்பதக்கங்களை வழங்கினார். அதாவது, டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் தங்கப்பதக்கம் மற்றும் டாக்டர் எஸ்.ராமச்சந்திரன் தங்கப்பதக்கம் ஆகியவை வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த மாணவி திவ்யா பி.எஸ்சி. கணிதம் படித்தார். இவருக்கு 'தினத்தந்தி' பொன்விழா தங்கப்பதக்கம் வழங்கப்பட்டு உள்ளது. இவர் தற்போது ஆதித்தனார் கலை-அறிவியல் கல்லூரியில் எம்.எஸ்சி. கணிதம் படித்து வருகிறார்.
பழையகாயலை சேர்ந்த மாணவி ஜெயரூபி, இளநிலை கணினி பயன்பாட்டியல் படித்தார். இவருக்கு பல்கலைக்கழக தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது. இவர் தற்போது மதுரை கல்லூரியில் எம்.சி.ஏ. படித்து வருகிறார். இதுதவிர திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் 7 பேரும், ஆதித்தனார் கல்லூரியில் 6 பேரும் டாக்டர் பட்டம் பெற்றனர்.