அரசு பள்ளியில் ஆசிரியர்களை கழிவறைக்குள் வைத்து பூட்டிய 3 மாணவர்கள் கைது


அரசு பள்ளியில் ஆசிரியர்களை கழிவறைக்குள் வைத்து பூட்டிய 3 மாணவர்கள் கைது
x

திருவொற்றியூர் அரசு பள்ளியில் ஆசிரியர்களை கழிவறைக்குள் வைத்து பூட்டிய 3 மாணவர்களை போலீசார் கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

திருவொற்றியூர்,

சென்னை திருவொற்றியூர் பஸ் நிலையம் அருகே ஜெய்கோபால் கரோடியா என்ற அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் 3 மாணவர்கள், அங்கு பாடம் நடத்தும் ஆசிரியைகளிடமும், மாணவிகளிடமும் தகாத முறையில் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் ஆசிரியர்கள் கழிவறை செல்லும்போது அவர்களை உள்ளே வைத்து கதவை வெளிப்புறமாக பூட்டி ரகளை செய்வதாகவும் புகார் எழுந்தது.

இதுகுறித்து ஆசிரியர்கள் அறிவுரைகள் வழங்கியும் 3 மாணவர்களும் திருந்தவில்லை. மாறாக மற்ற மாணவர்களை துன்புறுத்தினார்கள். இதை தட்டிக்கேட்ட ஆசிரியர்களை மிரட்டினார்கள். வேறு வகுப்புகளில் சென்று அமர்ந்துகொண்டு அங்கு பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு தொந்தரவும் செய்தனர்.

3 மாணவர்கள் கைது

மாணவர்களின் அட்டகாசம் தாங்காமல் தலைமை ஆசிரியர் சீனிவாசன் இதுகுறித்து திருவொற்றியூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் வண்ணாரப்பேட்டை போலீஸ் துணை கமிஷனர் பவன்குமார் ரெட்டி ஆலோசனையின் பேரில் இன்ஸ்பெக்டர் காதர்மீரான், இது குறித்த புகாரை ராயபுரத்தில் உள்ள குழந்தை நல அலுவலர் லலிதாவுக்கு அனுப்பினார்.

அவர், குறிப்பிட்ட அந்த 3 மாணவர்களையும், அவர்களது பெற்றோர்களையும் அழைத்து இது சம்பந்தமாக விசாரணை நடத்தினார். பின்னர் மாணவர்கள் 3 பேரையும் கைது செய்ய உத்தரவிட்டார். அதன் பேரில் பிளஸ்-2 மாணவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து, சென்னை கெல்லீஸ் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

1 More update

Next Story