ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட 3 மாணவர்கள் பிணமாக மீட்பு
மேட்டுப்பாளையம் அருகே ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட 3 மாணவர்கள் பிணமாக மீட்கப்பட்டனர்.
மேட்டுப்பாளையம்
மேட்டுப்பாளையம் அருகே ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட 3 மாணவர்கள் பிணமாக மீட்கப்பட்டனர்.
கல்லூரி மாணவர்கள்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நரிப்பள்ளம் சாலையில் மாம்பட்டி என்ற பகுதி உள்ளது. இந்த பகுதி வழியாக பவானி ஆறு ஓடுகிறது. இந்த நிலையில் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்த சென்னை அழகிரி தெருவை சேர்ந்த கல்யாணசுந்தரம் மகன் கனிஷ்க் (வயது 24), கரூர் அண்ணாசாலையை சேர்ந்த விஜயகுமார் மகன் ராஜதுரை (22), சூலூர் சித்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்த சம்பத்குமார் மகன் சுரேந்திரன்(22) மற்றும் அவர்களது நண்பர்கள் ரோஷன், கோகுல், ஆதன், சூர்யா, விஜய், சாணக்கியா, நிதிஷ் ஆகிய 10 பேர் இருசக்கர வாகனங்களில் நேற்று முன்தினம் அந்த பகுதிக்கு வந்தனர்.
அப்போது ஆற்றில் குறைந்த அளவே தண்ணீர் ஓடியதால் அவர்கள் இறங்கி குளிக்க முடிவு செய்தனர். தொடர்ந்து ஆற்றில் இறங்கி குளித்துக்கொண்டு இருந்தனர்.
திடீரென அதிகரித்த தண்ணீர்
அப்போது திடீரென்று தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் அங்கு குளித்துக்கொண்டு இருந்த கனிஷ்க், ராஜதுரை, சுரேந்திரன் ஆகிய 3 பேரும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர். மற்ற 7 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் மேட்டுப்பாளையம் போலீசார் மற்றும் மேட்டுப்பாளையம், அன்னூர் பகுதியை சேர்ந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட 3 பேரையும் பரிசல்காரர்கள் உதவியுடன் தேடினார்கள். ஆனால் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. அதற்குள் இருள் சூழ்ந்துவிட்டதால் தேடும் பணியை தொடர முடியவில்லை.
3 பேர் உடல்கள் மீட்பு
இதைத்தொடர்ந்து நேற்று காலையில் தீயணைப்பு நிலைய அதிகாரிகள் பாலசுந்தரம், விஜயகுமார் ஆகியோர் தலைமையில் வீரர்கள் நேற்று காலையில் பரிசல்காரர்கள் உதவியுடன் மீண்டும் தேடும் பணியை தொடங்கினார்கள். அப்போது சாமன்னா வாட்டர் ஹவுஸ் பின்புறத்தில் ராஜதுரை, கரட்டுமேடு கதவணை நீர்நிலைய பகுதியில் கனிஷ்க், குத்தரிபாளையம் பகுதியில் சுரேந்திரன் பிணமாக மீட்கப்பட்டனர்.
இதையடுத்து அவர்களது உடல்களை போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகநாதன், செல்வநாயகம், கனகராஜ் மற்றும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.