3 வாலிபர்கள் கைது; கலெக்டர் அலுவலகம் முற்றுகை


3 வாலிபர்கள் கைது; கலெக்டர் அலுவலகம் முற்றுகை
x

விளையாட்டு போட்டிக்கு பயன்படுத்திய "சவுண்ட் ஆம்ப்ளிபையரை" திருடிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெரம்பலூர்

விளையாட்டு போட்டி

பெரம்பலூர் மாவட்டம், நாவலூர் கிராமத்தில் காணும் பொங்கல் பண்டிகையன்று பொதுமக்கள் சார்பாக விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. விளையாட்டு போட்டிக்கு பயன்படுத்திய "சவுண்ட் ஆம்ப்ளிபையர்" நள்ளிரவில் திருடு போனது. இது தொடர்பாக கிராம மக்கள் அந்தப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டனர். அதில், களரம்பட்டியை சேர்ந்த நாகராஜ் மகன் சந்துரு(வயது 23), நாவலூரை சேர்ந்த செந்தில் மகன் சுரேஷ்(23) ஆகிய 2 பேர் "ஆம்ப்ளிபையரை" திருடிய காட்சிகள் பதிவாகியிருந்ததாம். அதனை தொடர்ந்து பொதுமக்கள் சந்துரு, சுரேஷ் ஆகிய 2 பேரையும் நேற்று காலை பிடித்து விசாரித்தனர்.

2 பேரிடம் போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று 2 பேரையும் தங்களிடம் ஒப்படைக்குமாறு பொதுமக்களிடம் கூறினர். ஆனால் பொதுமக்கள் எங்கள் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் ஏற்கனவே நடந்த திருட்டு சம்பவத்தில் இவர்கள் 2 பேரும் தொடர்புடையவர்கள், அவர்களிடம் இருந்து கோவில் பொருட்களை மீட்டு தந்துவிட்டு அழைத்து செல்லுமாறு போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. பின்னர் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சந்துரு, சுரேஷ் ஆகிய 2 பேரை மீட்டு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

தொடர் திருட்டு

இந்த நிலையில் நாவலூர் கிராம மக்கள் பெரம்பலூர் போலீஸ் நிலையத்துக்கு திரண்டு வந்தனர். அப்போது போலீசார் ஏன் கூட்டமாக வருகிறீர்கள் என்று கேட்டுள்ளனர். அதற்கு கிராம மக்கள் கடந்த ஒரு வருடமாக எங்கள் கிராமத்தில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளன. இதில் கோவில் திருட்டு சம்பவத்தில் சந்துரு, சுரேஷ் ஆகியோருக்கு தொடர்பு உள்ளது என்று அவர்களே ஒத்துக்கொண்டுள்ளனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, அவர்களிடம் இருந்து கோவில் பொருட்களை மீட்டு தருமாறு கூறினர். அதற்கு போலீசார் ஏற்கனவே திருட்டு நடந்த சம்பவங்களுக்கு முதல் தகவல் அறிக்கை உள்ளதா? என்று கேட்டு பொதுமக்களை விரட்டியதாக கூறப்படுகிறது.

கலெக்டர் அலுவலகம் முற்றுகை

இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அங்கிருந்து புறப்பட்டு தொடர் திருட்டை தடுக்கக்கோரி பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது வெளியே வந்த கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவை பொதுமக்கள் சந்தித்து எங்கள் கிராமத்தில் நடந்த தொடர் திருட்டு சம்பவத்திற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவில் பொருட்களை மீட்டு கொடுக்க வேண்டும். கிராம மக்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். பின்னர் அவர்கள் இது தொடர்பாக கோரிக்கை மனுவினை கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்து விட்டு கலைந்து சென்றனர். மேலும் அவர்கள் தங்களது கிராமத்தில் கஞ்சா புழக்கம் அதிகமாக இருப்பதாகவும், அதனை முற்றிலும் ஒழிக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் மேற்கண்ட வாலிபர்கள் "சவுண்ட் ஆம்ப்ளிபையரை" திருடியதை ஒப்புக்கொண்டதால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய லாடபுரத்தை சேர்ந்த ராேஜந்திரன் மகன் பார்த்திபன்(24) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.


Next Story