போதை மாத்திரை விற்ற 3 வாலிபர்கள் கைது
போதை மாத்திரை விற்ற 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனா்.
ஈரோடு ஈ.பி.பி. நகரில் போதை மாத்திரை விற்பனை நடந்து வருவதாக ஈரோடு மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் நேற்று அந்த பகுதியில் ரகசியமாக கண்காணித்து வந்தனர். அப்போது, ஈ.பி.பி. நகர் நால்ரோடு பகுதியில் சந்தேகப்படும்படியாக 3 வாலிபர்கள் மோட்டார்சைக்கிள் அருகே நின்று கொண்டிருந்தனர். அந்த வாலிபர்கள் போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றனர். உடனே போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் ஈரோடு மாணிக்கம்பாளையம் முனியப்பன் கோவில் வீதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் வசந்த் (வயது 26), தஞ்சாவூர் மாவட்டம் வண்டிப்பேட்டையை சேர்ந்த வடிவேல் மகன் கவுதம் (26), ஈரோடு மாணிக்கம்பாளையம் முதல் வீதியை சேர்ந்த ஷெரீப் மகன் அமீர் (23) ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்களது உடமைகளை சோதனை செய்தபோது வலி நிவாரண மாத்திரைகளை, போதை மாத்திரைகளாக விற்பனை செய்ய வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் 3 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து 420 வலி நிவாரண மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.